இந்தோனேசியாவில் 7 அடுக்குமாடி அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.
7 மாடி அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து
இந்தோனேசியாவின் (Indonesia) தலைநகர் ஜகர்த்தாவில் 7 மாடி அலுவலக கட்டிடத்தில், ஜப்பானை தளமாகக் கொண்ட டெர்ரா ட்ரோன் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான டெர்ரா ட்ரோன் இயங்கி வந்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் சுரங்கம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளுக்கு ட்ரோன் சேவைகளை வழங்குகிறது.

இந்நிலையில், இந்த கட்டிடத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து (Fire accident) ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, முதல் தளத்தில் பற்றிய தீ, மேலுள்ள மற்ற தளங்களுக்கும் பரவ தொடங்கியதால் தீ விபத்து அதிகரித்து கரும் புகை பரவ தொடங்கியது. இதனையடுத்து ஊழியர்கள் மற்றும் அருகே உள்ள குடியிருப்பாளர்கள் உடனடியாக கட்டிடத்தில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்
இதனைத்தொடர்ந்து, தகவலின் அடிப்படையில் ஏராளமான தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். மேலும் தீ விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

கர்ப்பிணி பெண் உட்பட 20 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில், தற்போது வரை ஒரு கர்ப்பிணி பெண் உட்பட 15 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் என மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து போலீசார் தீவிர விசாரணை (investigation) நடத்தி வருகின்றனர்.
