இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிற கொடூர நிகழ்வு, கொல்கத்தா ஆர்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவம் ஆகஸ்ட் 9 அன்று பாலியல் கொடுமைக்குள்ளாகிக் கொலை செய்யப்பட்ட கொடூரமாகும். இந்தக் கொடுமைக்கு எதிராகவும், நீதியை நிலைநாட்டி, பெண் மருத்துவர்கள் உள்ளிட்ட பெண் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் நாடெங்கும் போராட்டம் நடைபெற்றன. உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இது தொடர்பான வழக்கை விசாரித்து, பணிப்பாதுகாப்பை உறுதி செய்யவும், பாலியல் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும் ஒரு குழுவை அமைத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருவதால், கொல்கத்தா கொடூரம் அரசியல்ரீதியாகவும் கையாளப்படுகிறது. மேற்கு வங்க மாநில பா.ஜ.க.வினர் தொடங்கி, பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்கள் வரை இந்தக் கொடூரத்தைக் கண்டித்தும், திரிணாமூல் காங்கிரஸ் அரசையும், அந்தக் கட்சி இடம்பெற்றுள்ள ‘இந்தியா’ கூட்டணியையும் கடுமையாக விமர்சித்தனர். ஆகஸ்ட் 28ந் தேதியன்று மேற்குவங்காளத்தில் பாரதிய ஜனதா கட்சி முழு அடைப்புப் போராட்டம் நடத்தியது. பல இடங்களில் பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் மோதல்கள் ஏற்பட்டன.
பா.ஜ.க. போராட்டம் நடத்திய அதே நாளில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் பி.டி.சி. செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியானது. அதில், “கொல்கத்தாவில் ஒரு மருத்துவர் பாலியல் கொடுமைக்குள்ளாகி, கொலை செய்யப்பட்டது தேசத்தை உலுக்கி இருக்கிறது. இது இந்த வகையான ஒரே சம்பவம் அல்ல. பெண்களுக்கு எதிரான தொடர் குற்றங்களின் பாகமாகும். மழலையர் பள்ளி சிறுமிகள் கூட இத்தகைய கொடூரங்களுக்குத் தப்பவில்லை. நாகரிகம் அடைந்த எந்த சமூகமும் தங்கள் மகள்கள், சகோதரிகளுக்கு இத்தகைய அட்டூழியங்கள் நடப்பதை அனுமதிக்காது. தேசம் சீற்றம் கொள்ளும். நானும் சீற்றம் அடைகிறேன்.
இந்தியாவில் பெண்கள் அதிகாரம் பெறும் கண்கவர் பயணத்தின் உதாரணமாக என்னையே நான் கருதுகிறேன். ஆனால், நாட்டின் எந்தப் பகுதியிலும் பெண்களுக்கு எதிரானக் கொடுமைகளைப் பற்றிக் கேள்விப்படும்போது நானே மிகவும் வேதனையடைகிறேன்” என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் குடியரசுத் தலைவர் அவர்கள், அண்மையில் ராஷ்ட்ரபதி பவனுக்கு ரக் ஷா பந்தன் விழா கொண்டாட வந்த பள்ளிக் குழந்தைகள், நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரம் போல எதிர்காலத்தில் எதுவும் நிகழாது என்று கூறுமுடியுமா? என்று கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் குடிமக்களில் முதன்மையானவரான ஜனாதிபதியின் கட்டுரை, மேற்குவங்கத்தில் பா.ஜ.க. முழுஅடைப்புப் போராட்டம் நடத்திய நாளில் வெளியானபோது அது தலைப்புச் செய்தியாக ஊடகங்களில் பரவலானது. பெண்களுக்கு நேரும் கொடுமைகள் பற்றிய மக்களின் மனசாட்சியாக குடியரசு தலைவரின் குரல் எதிரொலித்தது. எனினும், இதனை மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவில் நடந்த பெண் மருத்துவர் படுகொலைக்கு எதிரான குரலாக மட்டும் கருது வேண்டியதில்லை. பா.ஜ.க. போராட்டம் நடத்திய நாளில் வெளியான குரல் என்று அடையாளப்படுத்த வேண்டியதுமில்லை.
பா.ஜ.க. ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டபோது, மனதுக்குள் கொந்தளித்த உணர்வுகளையும் சேர்த்தே ஜனாதிபதி இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சராசரி குடிமக்கள் நம்புகிறார்கள். காஷ்மீரில் ஒரு கோயிலுக்குள் பாலியல் கொடுமைக்குள்ளாகி சிதைக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக கொடியேந்தி ஊர்வலம் சென்ற பா.ஜ.க. பரிவாரங்களின் மனிதகுல விரோத செயலுக்கும் சேர்த்தே குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இப்போது பேசியிருக்கிறார் என்றே பொதுமக்கள் கருதுகிறார்கள்.
பா.ஜ.க.வின் டபுள் இன்ஜின் சர்க்கார் நடக்கும் உத்தரபிரதேசத்தில் பட்டியல் இன சமுதாயத்துப் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் நேர்ந்த கொடூரத்திற்கும் சேர்த்தே முடிவு கட்ட வேண்டும் என்பதே குடியரசு தலைவரின் எண்ணமாக இருக்க முடியும் என்பதே இந்தியர்களின் நம்பிக்கை. ஹிஜாப், மாட்டுக்கறி என ஏதோ ஒரு வகையில் பெண்களைத் தொடர்ந்து அச்சுறுத்தும் இந்திய ஆட்சியாளர்களின் செயல்பாடுகளையும் சேர்த்தே குடியரசு தலைவர் கண்டித்திருக்கிறார் என்பதாகவே நாட்டு மக்கள் கருதுகிறார்கள். கொல்கத்தா பெண் மருத்துவர் கொடூரப் படுகொலை கடைசி வன்முறையாக இருக்கட்டும் என்பதாகவே குடியரசு தலைவரின் கட்டுரையைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.