
சட்டமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதம் என்று சொல்லி, அவரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தீர்மானங்களை ஆளுநரின் கையெழுத்தில்லாமலேயே நிறைவேற்றிட உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் தொடர்பான 12 சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டதுடன், பல்கலைக்கழக வேந்தர் என்ற நிலையிலிருந்த ஆளுநருக்குப் பதில் அரசுக்கே (முதல்வர்) அந்தப் பொறுப்பு என்ற நிலையும் உருவாகியுள்ளது.
ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிக அதிகாரம் என்பதும், நியமனப் பொறுப்பில் உள்ள பெயரளவிற்கான நிர்வாகத் தலைமையான ஆளுநருக்கு கிடையாது என்பதும் இந்தத் தீர்ப்பின் மூலம் உறுதியானதால், தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி செய்யாத எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் கவர்னரை வைத்து இணை அரசாங்கம் நடத்துவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிற தா அந்த மாநிலங்களுக்கும், பொதுவான அளவில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் உரிமையை வழங்கக்கூடிய தீர்ப்பாக இது அமைந்தது.
ஆளுநரை பிரதமர் (மத்திய அரசின்) பரிந்துரை அடிப்படையில் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ்.ரவியாகவே செயல்படக்கூடிய பா.ஜ.க. பிரதிநிதியாகத்தான் கிண்டியில் உள்ள ராஜ்பவனையும், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளையும் பயன்படுத்தி வருகிறார். அதனால், ஆளுநரின் அதிகார வரம்பைக் கட்டுப்படுத்தக்கூடிய இந்தத் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நேரடியாக வாய் திறக்கவில்லை. அதற்குப் பதிலாக, குடியரசு துணைத் தலைவர் சட்டத்துறையினர் சார்ந்த ஒரு கருத்தரங்கில், ஆளுநர்களின் அதிகாரத்தை மட்டுப்படுத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான கடுமையான விமர்சனத்தை வைத்தார். உச்சநீதிமன்றம் என்பது சூப்பர் நாடாளுமன்றமா என விமர்சித்தார். அதே நேரத்தில், இந்த வழக்கில் வாதாடிய சட்ட வல்லுநர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தினார் தமிழ்நாட்டின் முதலமைச்சர். அதில், இந்தத் தீர்ப்பின் முக்கியத்துவத்தையும், அரசியல் சட்டத்தைக் காப்பாற்றும் வகையில் அது அமைந்திருப்பதையும் சட்ட வல்லுநர்கள் எடுத்துரைத்தார்கள்.
இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களான கேரளா, மேற்குவங்காளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் ஆளுநர்களால் தொடர்ச்சியானத் தொல்லைகள் அந்தந்த மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படுகின்றன. அந்த அரசுகள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பு, அந்த மாநிலங்களுக்கும் ஊக்கத்தை அளித்த நிலையில், இது தன்னுடைய அதிகாரத்திற்கு விடப்பட்ட சவால் என்றே மத்திய பா.ஜ.க அரசு கருதுகிறது. அதனை நேரடியாக வெளிப்படுத்த முடியாத நிலையில், மே 15ஆம் நாள் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் இந்தத் தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியிருப்பது மத்திய- மாநில அரசுகளின் அதிகாரம் குறித்து மட்டுமின்றி, நாடாளுமன்றமா-நீதிமன்றமா என்ற அரசியல் சாசனம் தொடர்பான விவாதத்திற்கும் வழி வகுத்துள்ளது.
ஆளுநர்களால் கிடப்பில் போடப்படும் மசோதாக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இந்தக் காலக்கெடு குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும் பொருந்தும் என்று அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் அவர்கள் ஆளுநருக்கான காலக்கெடுவிற்கும் சேர்த்தே நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.
குடியரசுத் தலைவர் அவர்கள் எழுப்பிய கேள்விகளில் பலவும் இந்த வழக்கு விசாரணையின்போதே நீதிபதிகளாலும், வழக்கறிஞர்களாலும் எழுப்பப்பட்டு, அது குறித்த வாதங்கள் வைக்கப்பட்டு, அதன்பிறகே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஒரு தீர்ப்பு வெளியான பிறகு, அப்பீல் மனு தாக்கல் செய்வதும், க்யூரேட்டிவ் மனு தாக்கல் செய்வதும் வழக்கம். அதற்கு மாறாக குடியரசுத் தலைவரே உச்சநீதிமன்றத்திடம் கேள்விகள் எழுப்பி, விளக்கம் கேட்டிருப்பது இந்திய அரசியலில் புதிய நிலைப்பாடாக அமைந்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவரை முன்வைத்து மத்திய அரசு இயங்குவதாகவும், இதன் மூலம் , சட்டமன்றத்தின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்திருப்பதை ஒன்றிய அரசு எதிர்க்கிறதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்குப் பதிலாக கவர்னர்களை அதிகாரமிக்கவர்களாக ஆக்குவதற்கு பா.ஜ.க விரும்புகிறதா? பா.ஜ.க.
ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னர்களைக் கொண்டு இணை அரசாங்கம் நடத்த திட்டமிடுகிறதா? என 3 கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
குடியரசுத் தலைவரின் 14 கேள்விகளுக்குப் பதிலாக முதல்வர் கேட்டுள்ள 3 கேள்விகளும் சேர்ந்து புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஜனநாயக நாட்டில் மக்கள்தான் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியை நியமனப் பதவியான ஆளுநர் மூலம் தடுக்க முடியும் என்றால் மக்களுக்கு அதிகாரமில்லையா?
உச்சநீதிமன்றத்தின் விளக்கத்திற்கு நாடு காத்திருக்கிறது.
k2wn7x