நாட்டு நடப்பு செய்திகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள அப்போது இரண்டு வழிகள்தான். ஒரு நாளில் மூன்று-நான்கு முறை ரேடியோவில் ஒலிபரப்பாகும் 10 நிமிடச் செய்திகள். மற்றொன்று, காலையிலும் மாலையிலும் வெளியாகும் நாளிதழ்கள். வானொலி நிலையம் என்பது மத்திய அரசாங்கத்தின் துறை சார்ந்தது என்பதால் அதில் குறிப்பிட்ட சில அதிகாரப்பூர்வ செய்திகளை மட்டுமே கேட்க முடியும். எல்லா வகையான செய்திகளையும் தெரிந்துகொள்வதற்கு நாளிதழ்கள்தான் பொதுமக்களின் நம்பிக்கைக்குரிய ஊடகம்.
பொங்கல்-தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் புத்தாடை, பலகாரம், கரும்பு, பட்டாசு, புது ரிலீஸ் படம் எனக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக நாளிதழ்களுக்கு ஒரு நாள் விடுமுறை விடப்படுவது வழக்கமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான நாளிதழ் நிறுவனங்கள் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை ஆகிய நாட்களுக்கு விடுமுறை விடுவதால், அதற்கு மறுநாள் அச்சுப் பத்திரிகைகள் வெளிவருவதில்லை. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு நாளிதழ்கள் சிறப்பு மலர்களை வெளியிடுவது வழக்கம். அதுமட்டுமின்றி அந்தப் பண்டிகைகள் நாளன்று காலையில் வெளியாகும் பத்திரிகையில் வாழ்த்துச் செய்திகளுடன், புதிய திரைப்படங்கள் எந்தெந்த ஊர்களில் எந்தெந்த திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றன என்ற விவரமும் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்யப்பட்டிருக்கும்.
சொந்த ஊரில் படம் பார்ப்பதற்கு ரசிகர் பட்டாளம் படையெடுக்கும். உள்ளூரில் டிக்கெட் கிடைக்காது என்று நினைப்பவர்கள் பக்கத்து ஊர்களுக்கு சைக்கிள், டூவீலர்களில் செல்வார்கள். வாடகை வேன்-கார் பிடித்து செல்கின்ற ரசிகர்களும் உண்டு. பயணத்தின்போது கையில் பத்திரிகை இருக்கும். பண்டிகை நாளில் ஏதேனும் ஒரு புது சினிமா பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆசை கொண்ட திரை ரசிகர்கள், ஒரு படத்திற்கு டிக்கெட் கிடைக்காவிட்டால், இன்னொரு படம் எந்த தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது என்பதையும் பத்திரிகைகளைப் பார்த்து தெரிந்துகொள்வார்கள். அச்சு இதழ்கள் நாட்டு நடப்புகளுக்கு மட்டுமின்றி, பொழுது போக்குகளுக்கும் வழிகாட்டிகளாக இருந்த காலம் அது.
பண்டிகை நாளுக்கு மறுநாள் பேப்பர் வெளிவராது என்பதால், வானொலியில் ஒலிபரப்பாகும் செய்தியைத் தவிர வேறு எதையும் பொதுமக்களால் அறிந்து கொள்ள முடியாது. ஒரு நாள் கழித்து, மீண்டும் நாளிதழ்கள் வரும்போதுதான் நாட்டில் என்ன நடந்தது, மக்கள் எப்படி பண்டிகைகளைக் கொண்டாடினார்கள், எந்த ஊரில் பட்டாசு விபத்துகள் ஏற்பட்டன, சிசிக்சை வசதிகள் எப்படி இருந்தன என்ற விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ள முடியும். தீபாவளிக்கும் பொங்கலுக்கும் ரிலீசான படங்களின் விமர்சனத்தையும் அப்போதுதான் ரசிகர்கள் படித்து தெரிந்துகொள்வார்கள். பாக்ஸ் ஆபீஸ் ஹிட் எது, ஃப்ளாப் எது என்று பத்திரிகை விமர்சனங்களின் அடிப்படையில் ரசிகர்களிடம் சூடான விவாதங்கள் நடக்கும்.
அந்தக் காலம் என்பது எந்தக் காலத்திலும் அப்படியே நிலைத்து நிற்பதில்லை. காலம் மாறிக்கொண்டேதான் இருக்கும். இப்போதும் அச்சிதழ்களுக்கு பண்டிகை நாட்களில் விடுமுறை விடப்படுகிறது. பண்டிகைக்கு மறுநாள் பெரும்பாலான நாளிதழ்கள் வெளியாவதில்லை. ஒரு சில நாளிதழ்கள் வெளிவந்தாலும் பத்திரிகை முகவர்கள், செய்தித்தாள் விற்கும் கடைகள், வீட்டுக்குப் பேப்பர் போடுபவர் போன்றவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், செய்திகளை அந்தக் காலம் போல ஒரு நாள் கழித்துதான் பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை இந்தக் காலத்தில் இல்லை.
நாளிதழ்கள் தங்கள் அச்சுப் பதிப்பிற்கு விடுமுறை விட்டாலும் ஆன்லைன் மூலமாக செய்திகளைத் தரும் வழக்கம் உள்ளது. 24 மணி நேர தொலைக்காட்சி செய்திச் சேனல்களில் உடனுக்குடன் நாட்டு நடப்பு ஒளிபரப்பாகிவிடுகிறது. பண்டிகை நாட்களில் அரசியல் கட்சிகளின் நிகழ்வுகள், மக்களின் பொழுதுபோக்கு எல்லாமும் நேரலையில் வீட்டுக் கூடத்திற்கும் கைப்பேசிக்கும் சென்று சேர்ந்து விடுகிறது.
புதுத் திரைப்படம் வெளியான சில நிமிடங்களில் முதல் ரீல் விமர்சனம், இரண்டாவது ரீல் விமர்சனம், இன்டர்வெல் பிரேக் விமர்சனம் என சூட்டோடு சூடாக இன்ஸ்டன்ட் விமர்சனங்கள் வெளியாகிவிடுகின்றன. FDFS எனப்படும் முதல் நாள் முதல் ஷோ பார்க்காவிட்டால் நண்பர்களிடம் தனக்கு அவமானமாகப் போய்விடும் என நினைக்கிறது இன்றைய தலைமுறை. பார்க்க முடியாத புதுப்படங்களை விரைவில் ஓ.டி.டி.யில் பார்த்துவிடலாம் என எதிர்பார்ப்பவர்களும் உண்டு.
இந்த மாற்றங்களை உணர்ந்த அச்சிதழ்கள் தங்களின் செய்தி வழங்கும் முறையில் புதிய உத்திகளைக் கடைப்பிடிப்பதும், மற்ற ஊடகங்களில் வெளியாகாத செய்திகள் தொடர்பான விரிவான கட்டுரைகள், புள்ளிவிவரங்கள், புலனாய்வு செய்திகள், மக்களின் எதிர்பார்ப்புக்குரிய தகவல்களைக் கொடுப்பதும் வழக்கமாக உள்ளது.
கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் ஊடகத்துறை பெரும் பாய்ச்சலை நடத்தியுள்ளது. பத்திரிகை வாயிலாக செய்திகளை பொதுமக்கள் தெரிந்துகொண்ட காலம் மாறி, பொதுமக்களே ஊடகர்களாக தாங்கள் அறிந்த செய்திகளை வழங்குகிறார்கள். அதன் தாக்கம் குறித்து அச்சிதழ்கள் அவர்களிடமே நேர்காணல் செய்து வெளியிடுகின்றன. மாற்றம் ஒன்றே மாறாதது