தலைமறைவாக இருக்கும் மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க 14 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் தனிப்படை போலீசார். சிக்காமல் போலீசுக்கு தண்ணி காட்டிக்கொண்டே இருக்கிறார். சிக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துவிடும் என்ற பயத்தில்தான் அவர் பதுங்கி பதுங்கி ஓடுகிறார் என்கிறது சிபிசிஐடி வட்டாரம்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம். ஆர். விஜயபாஸ்கருக்கு அவரி தம்பி மூலமாக கரூரில் எலெக்ட்ரிகல்ஸ் கடை நடத்தி வந்த பிரகாஷ் அறிமுகமாகி இருக்கிறார். இந்த பழக்கத்தில் தனது பினாமிகள் மூலம் எடுக்கப்பட்ட அரசு கான்ட்ராக்ட்களுக்கு எலெக்ட்ரிகல்ஸ் மெட்டீரியல்ஸ் அனுப்பி வந்திருக்கிறார் பிரகாஷ். இந்த பழக்கத்தில் விஜயபாஸ்கருக்கும் பிரகாஷுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் இருந்து வந்திருக்கிறது.
தோரணக்கல்பட்டியில் பல ஏக்கர் நிலங்களை வாங்கிப்போட்டிருந்த விஜயபாஸ்கர், பின்னாளில் விலை உயரும் என்று தன்னையும் வாங்கச்சொன்னதாகவும், அதன்பேரில் தானும் 30 கோடி ரூபாயில் 22 ஏக்கர் நிலத்தை வாங்கிப்போட்டதாகவும், அது தற்போது 100 கோடி ரூபாய் மதிப்பாக உயர்ந்திருக்கிறது என்றும் சொல்கிறார் பிரகாஷ்.
அந்த 22 ஏக்கர் நிலத்தை தான் சொல்லும் 4 நபர்களின் பெயரில் எழுத்தரும்படி விஜயபாஸ்கர் கேட்டதாகவும், தன் மகள் பெயருக்கு அந்த இடத்தை மாற்றிவிட்டேன் என்று சொன்னதால், தன் மகளை மிரட்டி மோசடியாக அந்த இடத்தை எழுதி வாங்கிவிட்டார் விஜயபாஸ்கர் என்று கரூர் போலீசில் புகார் அளித்திருந்தார் பிரகாஷ். ஆனால், விஜயபாஸ்கரின் பினாமிதான் பிரகாஷ். அந்த 100 கோடி ரூபாய் சொத்தும் விஜயபாஸ்கரின் சொத்துதான் என்ற தகவலும் உலவுகிறது.
100 கோடி ரூபாய் பத்திரப்பதிவு மோசடி புகார் இது சிபிசிஐடி போலீசார் வசம் சென்றபின்னர், விஜயபாஸ்கர் தலைமறைவாகிவிட்டார். இந்த வழக்கில் இருந்து தப்பிக்க விஜயபாஸ்கர் தரப்பு கரூர் மாவட்ட கீழமை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியது. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருக்கிறது.
நில மோசடி வழக்கில் தப்பித்தாலும், பினாமி சொத்துக்கள் என்பது நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்ற அச்சத்தில்தான், 14 நாட்களாக போலீசுக்கு தண்ணி காட்டிக்கொண்டே பதுங்கி பதுங்கி ஓடிக்கொண்டிருக்கிறார் விஜயபாஸ்கர் என்கிறது கரூர் காவல்துறை வட்டாரம்.
அதிமுக எம்.பிக்கு சொந்தமான வடமாநிலத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் பதுங்கியிருக்கிறார் என்ற தகவல் வந்ததால் 2 தனிப்படை போலீசார் வட மாநிலங்களில் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து 2 தனிப்படை போலீசார் அம்மாவட்டத்தில் தேடி வருகின்றனர். கேரளாவில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து ஒரு தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.