இது வழக்கமான தேர்தல் அல்ல; ஜனநாயக அறப்போர்! என்கிற வேட்கையில் ஆவேச பாய்ச்சலை காட்டியே பாஜகவை வலுவிழக்கச் செய்திருக்கிறது இந்தியா கூட்டணி.
யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான தேர்தலாகத்தான் இதுவரை நடந்த நாடாளுமன்ற தேர்தல்கள் அனைத்தும் இருந்தன. ஆனால், யார் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்கான தேர்தல் களம்தான் 18வது நாடாளுமன்ற மக்களவை-2024 தேர்தல் களம் என்று சொல்லியே போராடினார் இந்தியா கூட்டணியின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அது போலவே போராடினார்கள் ராகுல்காந்தியும் பிரியங்கா காந்தியும்.
அசுர சக்தி என்று மார்தட்டி வந்த பாஜகவை இன்று ஊசலாடும் ஆட்சியாக மாற்றியதிலும், வட மாநிலங்களில் இன்று பாஜக பெரிதாக பலமிழந்து நிற்பதற்கும் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி இருவரின் போர்க்குணம் பெரும்பங்கு வகித்துள்ளது.
இருந்த இடத்தில் இருந்தே ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெற்றி பெறுவது என்பது இப்போதைய சூழ்நிலையில் சாத்தியமல்ல என்பதை நன்குணர்ந்த பிரியங்கா காந்தி, சூறாவளி பிரச்சாரம் மூலம் சுழன்று சுழன்று அடித்தால் மட்டுமே பாஜக சுருண்டு விழும் என்பதை நன்குணர்ந்த பிரிங்கா காந்தி அதற்காக தேர்தலில் நிற்பதையே தவிர்த்தார்.
ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி இருவருமே மக்களவை தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தலில் நிற்பதை தவிர்த்தார். அதுகுறித்து அவரே, ‘’நான் தேர்தலில் போட்டியிடவோ, நாடாளுமன்ற உறுபினராகவோ ஒருபோதும் நினைத்ததில்லை. கட்சிக்காக பணியாற்றவே நினைக்கிறேன். தேர்தலில் போட்டியிட்டால் அந்த தொகுதியிலேயே அதிக காலம் இருக்க வேண்டிய சூழல் வரும். நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய மேற்கொள்ள ஒருவர் வேண்டும். நாங்கள் இருவருமே போட்டியிட்டால் அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிடும்’’ என்று சொன்னார்.
சொன்னதோடு நிற்காமல் தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு சுழன்று சுழன்று பாஜக மீது தாக்குதல் தொடுத்தார்.
16 மாநிலங்களில் பம்பரமாக சுழன்று பாஜகவுக்கு எதிர்வினை ஆற்றி உள்ளார் பிரிங்கா காந்தி. 108க்கும் மேலான பொதுக்கூட்டங்கள், பேரணிகள், 100க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சந்திப்புகள், தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடக பேட்டிகள் மூலம் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸின் அசுரத்தனமான பிரச்சார பீங்கியாக இந்த தேர்தலில் உருவெடுத்தார் பிரியங்கா காந்தி.
ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையும் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. கடந்த 2022ல் செப்டம்பர் 7ம் தேதி முதல் 2023 ல் ஜனவரி 30ம் தேதி வரையிலும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4,000 கிலோ மீட்டர் தூரம் நடந்தார் ராகுல். இந்த யாத்திரையின் போது 12 பொதுக்கூட்டங்கள், 100க்கும் மேற்பட்ட தெருமுனை கூட்டங்கள், 13 செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேசி ஆதரவு திரட்டியதன் எதிரொலிதான் இந்தியா கூட்டணியின் வெற்றி என்று சொன்னால் அது மிகையில்லை என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், ‘’ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா கட்சியின் பிரச்சாரத்தின் அடித்தளத்தை அமைத்தது’’ என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராகுல்காந்தி இப்படி மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து வந்த நிலையில், பிரதமர் மோடி மக்களை சந்திக்கவே இல்லை என்பதை ரேபரேலி பிரச்சாரத்தின் போது சுட்டிக்காட்டினார் பிரியங்கா காந்தி. ‘கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும் 4000 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று மக்கள் பிரச்சனைகளை அறிந்து வந்தார் ராகுல். ஆனால், பிரதமர் மோடி மக்களை சந்திப்பதே இல்லை. அவர் 10 ஆண்டுகால ஆட்சியில் சில கோடீஸ்வரர்களை மட்டுமே சந்தித்து அவர்களை வளர்த்து விட்டிருக்கிறார்’’ என்ற பிரியங்கா காந்தி, ‘’மதத்தின் பெயரால் வாக்குகளை பெறாமல் மக்கள் பணிகளை வைத்து வாக்குகளை கேட்கும் அரசை தேர்ந்தெடுங்கள்’’ என்று அந்த பிரச்சாரத்தில் அவர் மக்களிடையே கேட்டுக்கொண்டார்.
பாரத் ஜோடோ யாத்திரையின் போதும் சரி, மக்களவை பிரச்சாரத்தின் போதும் சரி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை ராகுல்காந்தி கேட்டறிந்து வந்ததையும், ஆனால் பிரதமரோ மக்களைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது போலவே அவர்களை சந்திக்க விரும்புவதில்லை என்பதையே பிரச்சாரத்தில் அவர் தொடர்ந்து பேசி குறிப்பிட்டு வந்தார். அது போலவே, ஏழைக்களின் நிலைமையை உணராத மோடி, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய அரசிடம் பணம் இல்லை என்று சொல்லும் மோடி, சில பணகாரர்களுக்காக 16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பினாலான கடனை தள்ளுபடி செய்கிறாரே என்கிற ஆதங்கத்தை தொடர்ந்து பிரச்சாரத்தில் பதிவு செய்து வந்தார் பிரியங்கா காந்தி.
அமேதி பிரச்சாரத்தின் போது, ‘’தனது ஆட்சிக்காலத்தில் ஏழை, எளியோரை சந்திக்கவே இல்லை பிரதமர் மோடி. விண்ணை முட்டும் அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை தனது 10 ஆண்டுகால ஆட்சியில் செய்து விட்டதாக பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் பிரதமர் மோடி’’ என்று கடுமையாக சாடினார் பிரியங்கா காந்தி.
தனது 10 ஆண்டுகால ஆட்சியில் இந்து -முஸ்லீம் அரசியலையே செய்து வருகிறார் மோடி என்றும் தனது பிரச்சாரங்களில் முன்வைத்து வந்தார் பிரியங்கா காந்தி.
பிரதமர் மோடியின் மக்களுக்கு உதவாத பேச்சுக்களை கேலியும் கிண்டலும் செய்த பேச்சின் மூலம் மக்களிடையே அதிகம் ஈர்க்கப்பட்டார் பிரியங்கா காந்தி. இந்தியாவிற்கு தன் குடும்பம் செய்த தியாகத்தையும், நாட்டின் மீது தன் குடும்பம் கொண்டிருக்கும் தேச பக்தியையும், தன் தந்தையின் படுகொலை தந்த வலிகளையும் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி பேசியது மக்களிடையே அதிகம் கவனம் பெற்றன.
பிரிங்கா காந்தி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அலைகடல் போன்று திரண்டனர். ராகுல்காந்தியின் பிரச்சார கூட்டங்களுக்கும் இத்தகையை கூட்டம் திரண்டது. அப்போது காங்கிரஸ் இந்த தேர்தலில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிரப்போகிறது என்பது தெளிவானது.
மத, இன வெறுப்பு அரசியலையே பிரதமர் மோடியும் பாஜகவினரும் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், ராமர் கோயில் கட்டியது போல் சீதைக்கு கோயில் கட்டுவோம் என்று பாஜக வாக்குறுதி தந்து வந்த நிலையில், ’’அரசு துறைகளில் உள்ள 30 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் மோடி அரசு அக்கறை காட்டவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்’’ என்று மக்களுக்கு வாக்குறுத்தி அளித்து வந்தார் பிரியங்கா காந்தி.
’’காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடி இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள்’’ என்று ராஜஸ்தான் பிரச்சாரத்தில் அருவறுப்பாக, மத விரோதத்தை தூண்டிய பிரதமர் மோடிக்கு, கர்நாடகாவில் பெங்களூருவில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய பிரியங்காந்தியின், ‘’போர் நடந்த போது என் பாட்டி இந்திராகாந்தி தனது தாலியை நன்கொடையாக தந்தார். என் தாய் சோனியாகாந்தி தன் தாலியை இந்த நாட்டிற்காக தியாகம் செய்துள்ளார். நிலைமையை இப்படி இருக்கும்போது காங்கிரசா தாலியை பறித்தது?’’ என்று கேட்டது மக்களை உலுக்கி எடுத்தது.
மோடியின் கொடூர குணம் மேலும் அம்பலமாகும் வகையில், ‘’நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் தாலியை தியாகம் செய்துள்ளார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் என் சகோதரிகள் தங்களின் தாலியை அடமானம் வைக்க நேர்ந்ததே? அப்போது எங்கே போனார் பிரதமர் மோடி? மணிப்பூர் பெண்களின் தாலியைப் பற்றி கவலைப்பட்டாரா மோடி? 600 விவசாயிகள் உயிரிழந்தபோது அவர்களின் மனைவிகள் தாலி பற்றி கொஞ்சமாவது நினைத்து பார்த்திருப்பாரா மோடி? தாலியின் முக்கியத்துவம் புரிந்திருந்தால் முதலில் அவர் இது மாதிரி நெறிமுறையற்று பேசியிருக்க மாட்டார்’’ என்று பேசியது மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகள் காங்கிரஸின் கோட்டை என்பதால் அதில் யாரும் ஓட்டை போட்டுவிடாதபடி அத்தொகுதிகளில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்து தீவிர பிரச்சாரம் செய்தார் பிரியங்கா காந்தி. அவ்விரு தொகுதிகளிலும் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.
பாஜக தலைவர்களின் கடுமையான வாய்மொழி தாக்குதல்களை எல்லாம் சாமர்த்தியாமாக எதிர்கொண்டு சமாளித்து அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார் பிரியங்கா காந்தி. கடந்த முறை பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்த அமேதியை 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கே.எல்.சர்மா கைப்பற்றியதற்கும், ரேபரேலியில் ராகுல்காந்தி 3.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கும் பின்னனியில் பிரியங்கா காந்தியின் பெரும் பங்கு உள்ளது.
அதனால்தான் பாஜகவின் கோட்டை என்று சொல்லப்படும் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றியில் தனது சகோதரி பிரிங்கா காந்தியின் பெரும் பங்கும் இருக்கிறது என்று சொல்லி ராகுல் பெரிமிதப்பட, உங்கள் சகோதரியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று பிரியங்கா காந்தி நெகிழ்ந்துள்ளார்.
‘’நமது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற இந்தியா முழுவதும் மக்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். மக்களை நினைத்து நான் பெருமைப் படுகிறேன்’’ என்று தேர்தல் வெற்றிக்கு பின்னர் நெகிழ்ந்திருக்கும் பிரியங்கா காந்தி, பாஜகவின் கோட்டை என்று மார்தட்டி வரும் உத்தரபிரதேசத்தில் பாஜகவை படு வீழ்ச்சி அடையச்செய்ய தன்னுடன் வெயிலிலும் மழையிலும் நின்று கடினமாக உழைத்து வெற்றியை தேடித்தந்த உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தொண்டர்களுக்கு ‘சல்யூட்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் பெற்ற பெரு வெற்றிக்காக தொண்டர்களை பார்த்து பிரியங்கா காந்தி சல்யூட் வைப்பது ஒரு புறமிருக்க, பிரியங்கா காந்திக்கு சல்யூட் வைக்கிறது காங்கிரஸ்.
காங்கிரஸின் 2004 மக்களவை தேர்தல் நட்சத்திர பிரச்சாரகர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்த இடங்களில் காங்கிரஸ் 46% வெற்றியை பெற்றுள்ளது. இவர் பிரச்சாரம் செய்த 43 இடங்களில் 20 இடங்களை காங்கிரஸ் வென்றிருக்கிறது.
2014 மற்றும் 2019ல் இழந்த செல்வாக்கை 2024 மக்களவை தேர்தலில் மீட்டெடுத் திருப்பதில் காங்கிரஸ் பிரச்சாரத் தலைவர் பிரிங்கா காந்தியின் ஆற்றலும் செயல்பாடுகளும் கட்சிக்குள் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
மற்றவர்களை போல் அல்லாமல் பிரியங்கா காந்தியின் பிரச்சார பாணி ரொம்பவே தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. மக்கள் மற்றும் கூட்டணிக்கட்சியினருடனான அவரின் அணுகுமுறையும் ஆச்சரியப்படும் விதமாக இருந்தது. இவைதான் மக்களவை தேர்தல் -2024ல் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு முக்கிய அடிநாதமாக விளங்குகிறது.