அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் முதல் முறையாக டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே இன்று(11/09/2024) நேரடி விவாதம் நடைபெற்றது. ABC செய்தி நிறுவனம் தொகுத்து வழங்கிய விவாத நிகழ்ச்சியில், பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரச்சனைகள் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், ‘Project 2025’ என்கிற சர்ச்சைக்குரிய திட்டத்தில் டொனால்ட் டிரம்ப்பின் பங்கு இருப்பதாக விவாத மேடையில் பரபரப்புக் குற்றச்சாட்டை வெளியிட்டு இருந்தார் கமலா ஹாரிஸ்.
டிரம்ப் மீதான கமலா ஹாரிஸின் இந்த குற்றச்சாட்டு அமெரிக்க அரசியலில் உச்சபட்ச விவாதத்தை தூண்டியுள்ளது.
‘Project 2025’ என்றால் என்ன?
922-பக்க சர்ச்சைக்குரிய கொள்கை முன்மொழிவுகளை கொண்ட ‘Project 2025’ என்கிற ஆவணம் அமெரிக்காவில் மீண்டும் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறது.
கடந்த 2023-ம் ஆண்டின் தொடக்கத்தில் தீவிர வலதுசாரி கொள்கைகளோடு வெளியாகி இருந்த அந்த ஆவணத்திற்கு எதிராக, கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சாரக் குழுக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் அரசாங்கம் அமைந்தால், அப்போது கொண்டு வரக்கூடிய கடுமையான வலதுசாரி அரசியல் சிந்தனைகளின் அடையாளமாக அந்த ஆவணம் குற்றம் சாட்டப்படுகிறது.
‘Project 2025′ என்பது ஒரு தீவிர வலதுசாரி சிந்தனைக் குழுவால் வெளியிடப்பட்ட ஒரு விரிவான புளூபிரிண்ட் ஆகும்; மேலும் ட்ரம்ப் மூலம் அமெரிக்க அரசாங்கத்தையே மாற்றியமைக்க அந்த ஆவணம் முயல்கிறது’, என்று AFP செய்தி நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல The Heritage Foundation என்கிற வலதுசாரி சிந்தனைக் குழு வெளியிட்ட அந்த 922-பக்க ஆவணத்தை தயாரிக்கும் பணியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தில் பணியாற்றிய பலர் பங்களித்துள்ளனர்.
ஆவணம் வெளியானது முதல் டிரம்ப் மீது ஜனநாயகக் கட்சியினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். டிரம்ப்பின் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆவணம் குறித்து எழுந்த தொடர் குற்றச்சாட்டுக்கு மத்தியில் ‘Project 2025’ திட்டத்தின் இயக்குனராக பதவி வகித்த டிரம்ப்பின் நெருங்கிய விசுவாசியாக கருதப்படும் பால் டான்ஸ் விலகினார்.
இந்த சூழலில், இன்று(11/09/2024) நடந்த அதிபர் வேட்பாளர்கள் விவாதத்தின் போது பேசிய கமலா ஹாரிஸ், அதிபராக டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ‘Project 2025’ எனப்படும் ஆபத்தான திட்டத்தை செயல்படுத்துவார் என்று குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப், ‘Project 2025-க்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த ஆவணத்தை தான் படித்தது கூட இல்லை‘ என்றும் மறுத்தார்.
அந்த ஆவணத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என டொனால்ட் டிரம்ப் மறுத்து வந்தாலும், தனது நிர்வாகத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகளால் அது உருவாக்கப்பட்டது என்கிற உண்மையை அவரால் மறுக்க முடியவில்லை.
‘Project 2025’ கூறுவது என்ன?
- உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மற்றும் நுகர்வோர் நிதிப் பாதுகாப்புப் பணியகம் உட்பட பல ஏஜென்சிகளை நீக்க ஆவணம் பரிந்துரை செய்கிறது
2. சுதந்திரமாக இயங்கி வரும் பல்வேறு அரசு ஏஜென்சிகளை அதிபரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது
3. அமெரிக்காவின் புலன் விசாரணை அமைப்பான FBI அமைப்பை “திமிர்பிடித்த மற்றும் சட்டவிரோத அமைப்பு” என்று அந்த ஆவணம் விவரிக்கிறது
4. கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களில் கருக்கலைப்பு மாத்திரைகளின் விநியோகத்தை கட்டுப்படுத்த ஆவணம் பரிந்துரைக்கிறது. கருக்கலைப்பு மாத்திரைகள் ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்திற்கு அனுப்பப்படுவதை சட்டவிரோதமாக்க இந்த ஆவணம் முயல்கிறது.
5. ஆபாசத்தை குற்றமாக்குவது மற்றும் கல்வித் துறையை நீக்குவது போன்ற சட்டங்களை இந்த ஆவணம் முன்மொழிகிறது
6. பள்ளிகள் மற்றும் அரசாங்கத் துறைகளில் உள்ள பன்முகத்தன்மை மற்றும் சமத்துவ திட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதை ஆவணம் நோக்கமாகக் கொண்டுள்ளது
டிரம்ப் மீண்டும் அதிபரானால் – பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை பறித்தல், சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் காப்பீட்டைக் குறைத்தல், கல்வித் துறையை நீக்குதல் போன்ற விதிமுறைகளை அமல்படுத்தி மக்களின் சுதந்திரத்தை பறிப்பார் என்று கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சாரக் குழுவினர் ‘Project 2025’ ஆவணத்தை மேற்கோள்காட்டி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த திட்டம் LGBTQ+ அமெரிக்கர்களுக்கு எதிரான பாகுபாட்டை தீவிரப்படுத்தும் என்றும் ஹாரிஸின் தேர்தல் பிரச்சாரக் குழு குற்றம் சாட்டுகிறது.
மேலும், “Stop Project 2025 Task Force” என்கிற பணிக்குழுவை தொடங்கியும் கமலா ஹாரிஸ் தலைமையிலான ஜனநாயகக் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.