ஒரே நேரத்தில் நடந்த இரு வேறு போராட்டங்களின் முழக்கங்களால் நேற்றிரவு தலைநகர் டெல்லியின் இந்தியா கேட் பகுதி அதிர்ந்தது.
நாடு முழுவதும் பொது இடங்களில் சுற்றி திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்ட பின்னர் மறுவாழ்வு மையங்களில் விடப்பட வேண்டும். மாறாக நாய்களை பிடித்து கருத்தடை செய்த பின்னர் அதே இடத்தில் விடக்கூடாது. அப்படிச் செய்தால் மொத்தம் நோக்கமும் தோல்வி அடைந்துவிடும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், 9.11.2025 நேற்று இரவு தலைநகர் டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் டெல்லியின் காற்று மாசுபாட்டைத் தடுக்கத் தவறிய பாஜக அரசைக் கண்டித்து போராட்டம் நடந்தது. தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்தும் போராட்டம் நடந்தது.

காற்று மாசுபாட்டுக்கு எதிரான போராட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளைஞர்கள் என முகக்ககவசம், பதாகைகளுடன் பங்கேற்றனர். உலகிலேயே டெல்லியின் உள்ள காற்றின் தரம்தான் மோசமாக உள்ளதாகவும், இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் முழக்கமிட்ட போராட்டக்காரர்கள் இதற்கு நடவடிக்கை எடுக்காத பாஜக அரசை கடுமையாக விமர்சித்தனர்.
தெரு நாய்களுக்கு ஆதரவான போராட்டத்தில் தெரு நாய்களை கொல்லக்கூடாது, காப்பகங்களில் அடைப்பது கொடுமை, கருத்தடை செய்து அதே பகுதியில் விடுவிப்பதே சரியான தீர்வு, காப்பகங்களில் அடைப்பது என்பது சர்வாதிகாரம் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் முழக்கங்கள் எழுப்பினர். நாய்களை காக்க வேண்டி பதாகைகள் ஏந்தி அமைதியான முறையில் இவர்கள் போராட்டம் நடத்தினர்.
ஒரே நேரத்தில் இரு போராட்டங்கள் நடந்ததால் டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
காற்று மாசுபாடு, தெருநாய்கள் எனும் டெல்லியின் தற்போதைய இரு பிரச்சனைகள் குறித்து போராட்டம் வெடித்திருப்பது நாடு முழுவதும் கவனம் பெற்றிருக்கிறது.
