அமெரிக்கா, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பேச்சுரிமையை வலியுறுத்தியும் இங்கிலாந்து தலைநகர் லண்டலில் நேற்று முன் தினம் மாபெரும் போராட்டம் வெடித்தது. வலது சாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில், வலது சாரிகள் ஒன்றிணைந்து நடத்திய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான ராஜ்ஜியத்தை ஒன்றுபடுத்துங்கள் – ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்றவர்கள், இங்கிலாந்தில் வெளிநாட்டினர் குடியேற அனுமதிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே குடியேறிய வெளிநாட்டினரை வெளியேற்ற வேண்டும் என்றும் , இங்கிலாந்து அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
ஒரே நேரத்தில் ஒன்றரை லட்சம் வலதுசாரிகள் திரண்டு போராட்டம் நடத்தியதில் லண்டன் நகரம் ஸ்தம்பித்தது. வலதுசாரிகள் ஒன்றிணைந்து போராடுவது இதுவே முதல் முறை என்பதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த போராட்டம்.

இந்த போராட்டத்திற்கு போட்டியாக, ஸ்டண்ட் அப் டு ரேசிசம் குழுவால் ‘பாசிசத்திற்கு எதிரான அணிவகுப்பு’ எனும் போராட்டமும் நடந்தது. இரு குழுவினருக்கும் இடையே மோதலும் வெடித்தது.
இங்கிலாந்தில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், நடப்பாண்டில் 28ஆயிரம் பேர் சட்டவிரோதமாக படகுகள் மூலம் இங்கிலாந்தில் குடியேறி இருக்கிறார்கள் என்பதால், ’’எங்கள் நாட்டை திரும்ப பெற விரும்புகிறோம்’’ என்ற முழக்கத்துடன் இந்த போராட்டம் வெடித்துள்ளது.

‘யுனைட் தி கிங்டம்’ போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பிரான்சின் தீவிர வலதுசாரி அரசியல் பிரமுகர் எரிக் செம்மூர், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் இருவரும் வீடியோ கான்பரன்ஸ் வழியாக பேசி ஆதரவு தெரிவித்தனர். ’’நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும். நாடாளுமன்றத்தை கலைத்து இங்கிலாந்தில் அரசாங்கத்தை மாற்ற வேண்டும். தேர்தலுக்காக அடுத்த நான்காண்டுகள் இங்கிலாந்து காத்திருக்க முடியாது’’ என்று போராட்டக்காரர்களுக்கு ஊக்கம் தந்தார். இடதுசாரி கட்சி கொலைகார கட்சி என்று சொன்ன மஸ்க், இடது சாரிகளிடம் வன்முறைதான் உள்ளது. அமெரிக்காவில் பழைமைவாத ஆர்வலர் சார்லி கிர்க் கொல்லப்பட்டதை இடதுசாரிகள் வெளிப்படையாக கொண்டாடுகிறார்கள். புரிந்துகொள்ளுங்கள் மக்களே’’ என்று பேசியது தங்கள் போராட்டத்திற்கான முன்னேற்றம் என்று நெகிழ்ந்துள்ளார் ராபின்சன்.

போராட்டத்தின் போது எல்லை மீறியவர்களை தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே மோதல் உண்டாகியதில், போலீசார் மீது தண்ணீர் பாட்டிலை வீசி அத்துமீறியதில் 26 போலீசார் படுகாயமடைந்துள்ளனர். பதிலுக்கு போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். 25 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறார்கள்.
இலங்கை, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் இங்கிலாந்தில் நிறைய பேர் வசித்து வருகிறார்கள். லண்டன் போராட்டம் அவர்களை பதைபதைக்க வைத்திருக்கிறது. இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி தாக்குதல் அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், வலது சாரியினர் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ளது இலங்கை, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினர் அச்சமடைந்துள்ளனர்.

ஆனாலும் இங்கிலாந்து பிரதமரின் பேச்சு அவர்களுக்கு ஆதரவைத் தந்திருக்கிறது. இந்தப் போராட்டம் குறித்து இங்கிலாந்து பிரதமர் கெயர் ஸ்டார்மர், ‘’நமது நாட்டின் கொடி பன்முகத்தன்மையை குறிக்கிறது. சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் மரியாதை அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நாடு பிரிட்டன். ஆதலால் இன ரீதியான மிரட்டலை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அதே நேரம் நமது நாட்டின் மதிப்புகளுக்கு தகுந்தபடி அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உண்டு’’ என்று தெரிவித்திருக்கிறார்.
பிரதமரின் இந்த பேச்சு புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலைத் தந்திருக்கிறது.
