சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட் துறை சார்பில் இரண்டு நாள் நடைபெற உள்ள “Umagine TN” தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 23) தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் அரசு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை ஏன் தகவல் தொழிநுட்ப துறைக்கு மாற்றப்பட்டார் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “தகவல் தொழில்நுட்பத்தை முன்வைத்து நடைபெறும் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கக் கூடிய தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகளில் நிதி அமைச்சராக மிகச் சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர். அதே மாற்றங்களை தகவல் தொழில்நுட்பத்திலும் கொண்டு வர தான் அவர் மாற்றம் செய்யப்பட்டார். நான் கொடுத்த பொறுப்பை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செய்து இருக்கிறார் என்பதற்கு இந்த மாநாடு சாட்சியாகும். நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் என்று நாங்கள் அவரை அழைப்போம். வளர்ச்சி என்பது வெறும் எண்களில் மாற்றம் அல்ல மக்களின் வாழ்க்கை தரத்தில் காட்டுகிறோம்”, என தெரிவித்துள்ளார்.
மேலும், ஐடியின் பொற்காலமாக திராவிட மாடல் அரசு திகழ்வதாகவும், வளர்ச்சி என்பது வெறும் எண்களில் மாற்றம் அல்ல மக்களின் வாழ்க்கை தரத்தில் காட்டுகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதைத் தொடர்ந்து, சென்னை, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளில் 1000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கிடும் திட்டத்தின் முதற்கட்டமாக சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள 500 முக்கிய இடங்களில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.