எல்லை மீறிய சமூக வலைத்தள விமர்சனங்களால் சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் வசித்து வந்த ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவத்தின் அதிர்ச்சியை அடுத்து யூடியூபர்களின் எல்லை மீறலால் ஒரு இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்ற செய்தி அதிரவைக்கிறது.
அடுத்தவர்களின் மனநிலை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் பிராங்க் என்ற பெயரில் ரொம்ப காலமாகவே யூடியூபர்கள் எல்லை மீறி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. போலீசாரும் பிராங்க் வீடியோ எடுப்போருக்கு கடுமையான எச்சரிக்கைகள் விடுத்து வருகின்றனர். ஆனால் இவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை என்றே மக்களிடம் ஆவேசம் இருக்கிறது.
காதலர்களின் பேட்டி என்கிற பெயரில் இரட்டை அர்த்த ஆபாச வீடியோக்களையும் தொடர்ந்து பதிவேற்றி வருகின்றனர் யூடியூபர்கள் சிலர். பலரின் சம்மதம் இல்லாமலேயே ரகசியமாக வீடியோ எடுத்தும், Public Opinion என்கிற பெயரில் ஆபாசமான இரட்டை அர்த்த பேச்சுக்களையும் பதிவேற்றி பலரையும் மன உளைச்சலுக்கு, கடும் சிக்கலுக்கு உள்ளாக்கி வருகின்றனர் யூடியூபர்கள் சிலர். அந்த வகையில்தான் சென்னையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளார்.
23 வயதான அந்த பட்டதாரி இளம்பெண் சென்னை புரசைவாக்கம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதியில் வசித்து வேலை செய்து வருகிறார். பெற்றோர் இல்லாத நிலையில் சகோதரர்களின் பராமரிப்பில் இருந்து வருகிறார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் சென்னை அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்திற்குச் சென்றிருக்கிறார். அப்போது, ‘வீரா டாக் டபுள் எக்ஸ்’ என்கிற யூடியூப் சேனலுக்காக காதல் தொடர்பாக பேட்டி எடுத்துள்ளனர்.
இந்த இளம்பெண்ணிடமும் கருத்து கேட்க, அந்த இளம்பெண் முதலில் மறுத்துள்ளார். உடனே, இந்த பேட்டியை வெளியிட மாட்டோம். அப்படியே வெளியிட்டாலும் தேவையற்றவற்றை டெலிட் செய்துவிட்டுத்தான் வெளியிடுவோம் என்று உறுதியாகச் சொன்னதும், அதை நம்பி,அந்த யூடியூபர்கள் கேட்க கேட்க, ஏதோ ஒரு ஆர்வத்தில் காதல் பற்றி அதுவும் இரட்டை அர்த்த டயலாக்கில் ஜாலியாகப் பேசியுள்ளார். பேசிவிட்டு, இந்த பேட்டியை வெளியிட வேண்டாம். அப்படி வெளியிட்டால் பேசிய எல்லாவற்றையும் வெளியிட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். எதற்கும் வீடியோ வெளியிடுவதற்கு முன் தன்னிடம் காட்டிவிடுங்கள் என்றும் முன்னெச்சரிக்கையாக சொல்லி இருக்கிறார்.
அப்படி இருந்தும், தங்களுக்கு ஏதோ ஒரு பொக்கிஷம் கிடைத்துவிட்டது போல, அந்த பெண் பேசியதை அப்படியே அந்த யூடியூப் சேனல் வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி இருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வெளியாகி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. இது தெரியவந்ததும் அப்பெண் பதறியிருக்கிறார். சகோதரர்களுக்கும், உறவினர்களுக்கும் இது தெரியவந்தால் என்னாவாகுமோ? என்று மன உளைச்சலில் இருந்துள்ளார். இதில் அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவரை தோழிகள் மீட்டு கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறி வருகிறார்.
இது குறித்த விபரம் அறிந்ததும் கீழப்பாக்கம் போலீசார் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லி அழுதிருக்கிறார்.
பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி அந்த யூடியூப்பை நடத்தி வந்த சென்னை வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் 1வது தெருவைச் சேர்ந்த ராம்(21) மற்றும் அவரது உதவியாளர் யோகராஜ்(21), அந்த இளம்பெண்ணை பேட்டி எடுத்த அண்ணாநகர் விஜயா தெருவைச் சேர்ந்த ஸ்வேதா(31) ஆகியோரை கைது செய்துள்ளனர்.
யூடியூபர்கள்தான் எல்லை மீறிப்போகிறார்கள் என்றால், அவர்கள் மைக்கை நீட்டினாலே பின்விளைவுகளைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் பலரும் இஸ்டத்திற்கு பேசிவருவதும் இனி தவிர்க்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.