பூரி ஜெகந்நாதர் கோயிலின் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது என்று சொல்லி தமிழர்களை கொச்சைப்படுத்தி இருந்தார் பிரதமர் மோடி. இப்போது 46 ஆண்டுகளுக்கு பின்னர் பூரி ஜெகந்நாதரின் கருவூல அறை திறக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் இருந்து சென்ற்தா சாவி? என்று பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரம், மோடி சொன்ன இமாலய பொய் அம்பலமாகி இருக்கிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
ஒடிசாவில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் பிஜேபி ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. ஆனால், இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பிஜேடி கட்சியை வீழ்த்த, தமிழர் எதிர்ப்பு முழக்கத்தினை கையில் எடுத்தது பாஜக.
ஒடிசாவின் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கிற்கு எல்லாமுமாக இருந்த தமிழர் வி.கே.பாண்டியனை குறிவைத்து, ஒரு தமிழர் ஒடிசாவை ஆள்வதா? பூரி ஜெகந்நாதரின் கருவறை சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டது என்றெல்லாம் சொல்லி, பாண்டியனை இழிவுபடுத்துவதாக நினைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்தினார்கள் பிரதமர் மோடியும், அமித்ஷாவும்.
பூரி ஜெகந்நாதர் கோவிலில் 2 பொக்கிஷ அறைகள் உள்ளன. ஒன்று ரத்ன பந்தர். இன்னொன்று பிடார் பந்தர். இதில் ரத்ன பந்தர் உள் அறை. பிடார் பந்தர் வெளி அறை. கடந்த 1978ல் திறக்கப்படட்து ரத் பந்தர் அறை. அதன் பின்னர் 1985ல் இந்திய தொல்லியல் துறையால் திறக்கப்பட்டது.
ரத்னபந்தரில் 2 அறைகள் உள்ளன. உள்ளே இருக்கும் அறை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் இருந்தது. திருவிழாக்காலங்களில் மட்டுமே வெளியே இருக்கும் அறை திறக்கப்பட்டு வந்தது. வெளிப்புறம் இருக்கும் அறையை திறந்தால்தான் உட்புறம் இருக்கும் அறையையும் அதன் பூட்டையும் திறக்க முடியும். உள்புற கதவை திறக்க வேண்டுமானால் நிறைய நடைமுறைகள், விதிகள் உள்ளன. உச்சநீதிமன்றம் ஓய்வு பெற நீதிபதிகளின் முன்னிலையில் வரும் ஜுலை மாதம் உள்புற அறை திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படியே ஜூலை மாதத்தில் திறக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வரும்போதெல்லாம் பாஜக கடவுளை அரசியலுக்குள் இழுக்கிறது. ஜெகந்நாதர் கருவூல அறையை கையில் எடுக்கிறது என்றும் பாண்டியன் குற்றம்சாட்டியிருந்தார்.
தற்போது பிஜேபி ஆட்சியில் பூரி ஜெகந்நாதரின் கருவூல அறை 46 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒடிசா முதல்வர் அலுவலகம், ‘’ஒரு பெரிய நோக்கத்திற்காக ஜெகந்நாதன் விருப்பத்தின் பெயரில் 45 ஆண்டுகளுக்கு பிறகு கருவூல அறை திறக்கப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளது.
இந்த கருவூல அறையில் ஜெகந்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட தங்கம், வைரம், பவளம், முத்துக்கள் உள்ளன. விலைமதிப்பற்ற இத்தனை நகைகள் உள்ள கருவூல அறையின் சாவி தொலைந்துவிட்டது என்றும், அது தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டது என்றும் பாண்டியனை தாக்கும் வகையில் ஒட்டுமொத்த தமிழர்களையும் தாக்கினார் மோடி.
இப்போது இந்த கருவூல அறை திறக்கப்பட்டிருப்பதால் தமிழ்நாட்டிலிருந்து சென்றதா சாவி? என்று கேள்வி எழுப்புகின்றனர் தமிழர்கள். என்ன சொல்லப்போகிறார் பிரதமர் மோடி?