வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட இரவு உணவு மிகவும் மோசமாக இருந்தது என்று நடிகர் பார்த்திபன் புகார் தெரிவித்திருந்த நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் இப்புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்திருக்கிறது. உணவு சப்ளை செய்த அந்த சேலம் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்துள்ளது.
வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு கொடுக்கின்ற உணவு தரமானதாக இல்லை என்று அவ்வப்போது பலரும் புகார் கூறி வரும் நிலையில், நடிகரும் இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபனும் அதே புகாரினை முன் வைத்திருந்தார்.
13.10.2024ல் சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயிலில் பயணித்துள்ளார் பார்த்திபன். இரவு உணவில் வழங்கப்பட்ட சிக்கன் உணவு ரொம்ப மோசமாக இருந்துள்ளது. பார்த்திபனுடன் பயணித்த பயணிகள் பலரும் இதைக்கண்டு ஆத்திரப்பட, அவர்களின் மனக்குமுறலுடன் தனது மனக்குமுறலையும் சேர்த்து ’’உணவு பரிமாறியவர்கள் சிறப்பாக செய்தனர். நல்லா சுகாதாரமாக இருந்தது. ஆனால், இரவு 19.22க்கு வழங்கிய உணவு மற்றும் சிக்கன் படு மோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகை வாங்கிக்கொண்டும், இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம்’’ என்று ரயில்வே புகார் புத்தகத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்த புகாரினை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது வைரலானது. இதையடுத்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.
தெற்கு ரயில்வே துறை நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நடந்த விசாரணையில் தரமில்லாத உணவு வழங்கப்பட்டது உறுதியானது. அந்த உணவை வழங்கியது சேலம் ஒப்பந்த தாரர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த சேலம் ஒப்பந்த தாரருக்கு அபராதம் விதித்த சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள், இனிமேல் தரமற்ற உணவு வழங்கக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.