விஜய் சொல்வது உண்மைதான். பாஜகவின் ஏ டீம், பி டீம் அல்ல தவெக. பாஜகவின் சி டீம்தான் என்று அடித்துச்சொல்கிறார் அமைச்சர் ரகுபதி.
அவர் மேலும் தவெக குறித்தும், தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்தும் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’திராவிட மாடல் ஆட்சியினுடைய கொள்கைகளை தமிழக மக்களிடம் இருந்து அகற்றிவிட முடியாது என்பதை நேற்றைய தினம் விஜய் வெளியிட்டிருக்கும் ஜெராக்ஸ் காப்பியில் இருந்து நாம் தெரிந்துகொள்ள முடியும். விஜய் வெளியிட்டது திமுக கொள்கைகளின் ஜெராக்ஸ் காப்பிதான்.
எங்களுடைய கொள்கைகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறாரே தவிர, திராவிட மாடல் ஆட்சி, அதுவும் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்கின்ற கொள்கைகளை தமிழக மக்களிடம் இருந்து யாரும் எடுத்துவிட முடியாது. உழைப்புக்கு எடுத்துக்காட்டு எங்களுடைய தளபதிதான்.
காலை உணவுத்திட்டத்தை தந்த எங்கள் தளபதிக்கு தமிழகத்தில் என்றைக்குமே தனி இடம் உண்டு. உழப்பின் மற்றொரு வடிவமாக விளங்கிக்கொண்டிருப்பவர்தான் துணை முதல்வர். அவருக்கும் தமிழக மக்களிடையே தனி இடம் உண்டு.
இதுவரைக்கும் ஏ டீம், பி டீம் பார்த்திருக்கிறோம். தவெக ஒரு பாஜகவின் சி டீம். ஆளுநரை ஏன் விஜய் எதிர்க்கிறார் என்றால், ஆளுநரை எதிர்த்து பேசினால்தான் தமிழ்நாட்டில் எடுபடும். எதிர்ப்புக்கு ஆளாகி இருக்கின்ற ஒருவரைப்பற்றி புகழ்ந்து பேசினால் எடுபடாது. தமிழர்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கும் ஆளுநரைப்பற்றி பேசினால் தனக்கு மரியாதை கிடைக்கும் என்று ஆளுநரைப்பற்றி பேசி இருக்கிறார் விஜய். மற்றபடி தவெக முழுக்க முழுக்க பாஜகவின் சி டீம்தான்.
நான் யாருடைய ஏடீமும் அல்ல; பி டீமூம் அல்ல என்கிறார் விஜய். அவருக்குத் தெரியும் தான் பாஜகவின் சி டீம் என்று.
அதிமுக இனி எடுபடாது என்று தெரிந்துதான் மேலும் அக்கட்சி தொண்டர்களை தன் பக்கம் இழுக்கும் குறிக்கோளில்தான் அக்கட்சி பற்றி விஜய் பேசவில்லை.
234 தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும். மக்களை சந்திக்க வேண்டும். வாக்குகளை பெறவேண்டும். அதற்கு பிறகுதான் ஆட்சியை பிடிக்க நினைக்க வேண்டும்.
எங்களுடைய கூட்டணியை யாரும் பிரித்துவிட முடியாது. தலைவரின் பாசத்தினால் யாரும் எங்களை விட்டு போக மாட்டார்கள்.
திமுக ஒரு பழுத்த மரம். இதை தாக்கி பேசினால்தான் மக்கள் மன்றத்தில் எடுபடும் என்று நினைக்கிறார் விஜய். ஆனால், தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறார் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்’’என்று தெரிவித்தார்.