நாட்டை ஒன்றிணைப்பதே உண்மையான தேசபக்தி என்றும், பணக்காரர்களும் ஏழைகளும் வெவ்வேறு இந்தியாவில் வாழ்கிறார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டாம் நாளாக பாரத் ஜோடோ நியாய யாத்திரையை நடத்தி வரும் ராகுல் காந்தி மக்களிடையே உரை நிகழ்த்தினார்.
உத்தரப் பிரதேச காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய் ராய் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து யாத்திரை நடத்தி வரும் ராகுல் காந்தி, காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
குடாலியா பகுதியில் மக்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, “இந்தியா அன்பின் நாடு, வெறுப்பின் நாடு அல்ல” என்று தெரிவித்தார்.
சகோதரர்களுக்கு இடையிலான மோதலால் நாடு பலவீனமடையும், நாட்டை ஒன்றிணைப்பதே உண்மையான தேசபக்தி, என்று ராகுல் காந்தி அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “நாட்டில் இரண்டு இந்தியா உள்ளது” – பணக்காரர்களுக்கு ஒன்றும் ஏழைகளுக்கு ஒன்றுமாக இருப்பதாக விமர்சித்தார்.
நாட்டின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஊடகங்கள் காட்டுவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
“இந்த ஊடகம் மோடி ஜியை 24 மணி நேரமும் காண்பிக்கும், ஐஸ்வர்யா ராயை காண்பிக்கும், ஆனால் உண்மையான பிரச்சினைகளை காட்டாது” என்று கூறினார்.
இந்த சூழலில், உத்தரப் பிரதேசத்தின் ராய்பரேலியில் நடைபெறும் யாத்திரையில் ராகுல் காந்தியுடன் கலந்து கொள்ள உள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தலைமையில் மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்திரை 6,700 கிலோ மீட்டர் தூரம் அளவிலான சுமார் 15 மாநிலங்களை உள்ளடக்கி நடத்தப்படுகிறது.