மக்களவையில் இன்று குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அனல் பறக்க பேசி, பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவையை அதிரச்செய்தார்.
பாஜக தலைவர்களை கூட மோடி பயமுறுத்தி வைத்திருக்கிறார். மோடிக்கு பயந்து அமைச்சர்கள் தனக்கு வணக்கம் கூட வைப்பதில்லை என்று வெடித்தார். காங்கிரஸ் உங்களைக்கண்டு அஞ்சவில்லை. நீங்கள்தான் காங்கிரசைக்கண்டு அஞ்சுகிறீர்கள் என்று பாஜகவை தெறிக்கவிட்டார்.
நீட் ஒரு வணிகத்தேர்வு:
’’நீட் தேர்வுக்காக மாணவர்கள் பல ஆண்டுகளாக தயாராகிறார்கள். ஆனால் உண்மையில் மாணவர்கள் நீட்டை நம்பவில்லை. இது பணக்காரர்களுக்காக வடிமைக்கப்பட்டது என்பதை மாணவர்கள் உணர்ந்துள்ளார்கள். நீட் தேர்வுக்காக தயாராகும் மாணவர்களில் நான் சந்தித்த ஒவ்வொருவருமே நீட் தேர்வு ஏழைகளுக்கானது அல்ல; அது பணக்காரர்களுக்கானது என்றே சொல்கின்றனர். அதனால்தான் சொல்கிறேன் இது ஒரு வணிகத்தேர்வு. கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்திருக்கிறது. ஆனால், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தில் ஆளும் அரசுக்கு அக்கறை இல்லை.’’
பாஜகவுக்கு பாடம் கற்பித்த அயோத்தி:
’’அயோத்தி ராமர் கோயில் பாஜகவிற்கு பாடம் கற்பித்திருக்கிறது. அயோத்தி ஜென்மபூமி விழாவில் அம்பானியும், அதானியும்தான் இருந்தார்கள். பொதுமக்களுக்கு , ஏழைகளுக்கு அழைப்பில்லை. அவர்கள் வரவுமில்லை. அயோத்தியில் போட்டியிடுவதற்காக இரண்டு முறை முயற்சித்தார் மோடி. ஆனால், கருத்துக்கணிப்புகள் எச்சரித்ததால் அவர் அங்கே போட்டியிடவில்லை. ’’
உள்நாட்டுப்போர்:
’’பாஜகவின் அரசியலால் மணிப்பூரை எரித்துவிட்டார்கள். உள்நாட்டு போராக மணிப்பூரை மாற்றிவிட்டார்கள். இத்தனை சம்பவம் நடந்தும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லவேயில்லை. ’’
Use and throw – அக்னிவீர் :
’’அக்னிவீர் திட்டத்தில் பணிபுரியும் வீரர் ஒருவர் பணிபுரியும் வீரர் உயிரிழந்தால் அவரின் மரணத்தை வீர மரணமாக பாஜக அரசு ஏற்காது. இழப்பீடு வழகாது இந்த அரசு. அக்னிவீர் திட்டத்தில் வீரர்களுக்கு மிறையான பயிற்சியும் கிடையாது. வீரர்களை பயன்படுத்துக்கொண்டு தூக்கி எறியும் திட்டமே அக்னிவீர் திட்டம். ராணுவத்தில் பணியாற்றும் ஒருவருக்கு அதிக சலுகை கிடைக்கும், இன்னொருவருக்கு கிடைக்காதுபோகும். இது ராணுவத்தில் பிளவை ஏற்படுத்தும்’’ என்று ராகுல்காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, தவறான தகவலை சொல்கிறார் ராகுல். அக்னிவீர் திட்டத்தில் வீரர் உயிரிழந்தால் அவரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என்று ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.
பரமாத்மாவிடம் கேட்டுத்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையா?
’’தனக்கு கடவுளுடன் நேரடி தொடர்பு இருப்பதாக சொல்கிறார் பிரதமர் மோடி. அவர் நேரடியாகவே பரமாத்மாவுடன் பேசுவார். பரமாத்மாவும் நேரடியாக மோடியின் ஆன்மாவோடு பேசுவார். கடவுளுடன் தொடர்பில் உள்ள பிரதமர் கடவுளிடம் கேட்டுத்தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டாரா?’’ என்ற கேள்வியை எழுப்பிய ராகுல், சிவனின் அபய முத்திரைதான் காங்கிரச் கட்சியின் சின்னம் என்றார்.
நீங்கள் உண்மையான இந்துக்கள் அல்ல:
’’சிறுபான்மை மக்கள் மீது ஒன்றிய அரசு தாக்குதல் நடத்தியுள்ளது. பாஜக அரசை எதிர்ப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எங்களில் பலரும் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டிருக்கிறோம். சில தலைவர்கள் சிறையில் உள்ளார்கள். பிரதமரின் உத்தரவால் நான் தாக்கப்பட்டேன். 55 மணி நேர அமலாக்கத்துறை விசாரணை நடந்தது. எங்களிடம் அதிகாரத்தை விடவும் மேலான ஒன்று இருந்தது; அதுதான் உண்மை என்ற ராகுல்காந்தி, காந்தி படத்தின் மூலம்தான் மகாத்மா காந்தி பற்றின் அனைவருக்கும் தெரியவந்ததாக சொல்கிறார் பிரதமர் மோடி. அவரின் அறியாமையை புரிந்துகொள்ள முடிகிறது’’ என்றார் ராகுல்.
தைரியம் பற்றி ஒரு மதம் மட்டும் பேசவில்லை. இஸ்லாம், கிறிஸ்துவம் உள்ளிட்ட அனைத்து மதங்களுமே தைரியம் பற்றி பேசுகின்றன. மாமனிதர்கள் எல்லோரும் அகிம்சை பற்றியே பேசியிருக்கிறார்கள். ஆனால், இந்துக்கள் என சொல்லிக்கொள்ளும் சிலர் வன்முறை – வெறுப்பு – பொய் பற்றியே பேசி வருகிறார்கள். இதை இந்து மதம் பரப்பாது. நீங்கள் உண்மையான இந்துக்கள் அல்லர் என்றார் ராகுல்.
ராகுல் இப்படி பேசிக்கொண்டிருந்தபோது குறிக்கிட்ட பிரதமர் மோடி, ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என சொல்வது மோசமானது என்று கண்டனம் தெரிவித்தார். அதற்கு உடனே ராகுல், ‘’மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ்.தான். ஒட்டுமொத்த இந்து சமுதாயம் கிடையாது. இந்தியாவின் பிரதமர்தான் மோடி. இந்துக்களின் பிரதிநிதி அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்புணர்வை தூண்ட மாட்டார்கள் ‘’ என்று பதிலடி கொடுத்தார்.
மரியாதையுடன் பேச வேண்டும்:
ராகுலின் இந்த பேச்சுக்கு ஒன்றிய பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘’முதல் முறையாக மக்களவை எதிர்க்கட்சி தலைவராகி இருக்கும் ராகுல் மரியாதையுடன் பேச வேண்டும். இந்து மத நம்பிக்கையை பற்றி அவமரியாதையாக பேசுகிறார். இதே அவர் அவையில் மற்ற மதங்களின் நம்பிக்கை பற்றி பேசுவாரா?’’ என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.