நாடு முழுவதிலும் நீட் தேர்வுக்கான எதிர்க்குரல்கள் வலுத்து வருகின்றன. ஒன்றிய அரசு நடத்திய நெட், நீட் தேர்வுகள் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிலையில், நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வையும் ரத்து செய்யக்கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து, ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று அவர் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். வரும் 24ம்தேதி அன்று திமுக மாணவர் அணியினரும் நீட்டுக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, ’’நீட் வினாத்தாள் கசிவுகளை தடுப்பதில் பிரதமர் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது. நீட் ஊழல் மையமாக பாஜக ஆளும் மாநிலங்கள் திகழ்கின்றன. மத்திய பிரதேசத்தை உலுக்கு வியாபம் ஊழலை விட மிகப்பெரிய ஊழலாக நீட் முறைகேடு உருவெடுத்துள்ளது’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’அரசின் அனைத்து அமைப்புகளையும் பாஜக கைப்பற்றியதே நீட் முறைகேடு போன்ற ஊழலுக்கு காரணம். மாணவர்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் வேதனையில் உள்ளனர். வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை ஒவ்வொன்றாக ஒன்றிய அரசு மூடி வருகிறது. நான் இரண்டாம் கட்ட ஒற்றுமை நியாய யாத்திரை சென்றபோது வினாத்தாள் கசிவு பற்றி மாணவர்கள் என்னிடம் கூறினர். மோடியின் கவனம் முழுக்க சபாநாயகர் தேர்வில்தான் உள்ளது. மாணவர்கள் விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் அரசு செயல்படுவதை அனுமதிக்க மாட்டோம்.
இந்திய கல்வித்துறையில் பாஜகவும் அதன் அமைப்புகளும் ஊடுருவி அதை குட்டிச்சுவராக்கி விட்டன. கல்வியை செல்லாததாக்கும் நடவடிக்கையை மோடி அரசு தற்போது செய்துள்ளது. சுதந்திரமான கல்வி முறை இல்லாமல் போனதற்கு காரணமே பாஜகவும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தான். சுதந்திரமான கல்வி முறையை மாற்றி ஆர்.எஸ்.எஸ். , பாஜகவின் சித்தாந்தத்தை புகுத்திவிட்டது.
இத்தனை பிரச்சனை இருக்கும்போது சபாநாயகர் தேதல் பற்றி மட்டுமே தற்போது மோடி கவலைப்படுகிறார். நீட் பற்றியோ மற்ற பிரச்சனைகள் பற்றியோ அக்கறையில்லை. இதனால்தான் வாரணாசியில் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு நம்பவம் நடந்துள்ளது. ஆனால், எந்தவித சமரச முறைக்கும் மோடி தயாராக இல்லை’’ என்று கூறினார்.