
இந்திய மக்களின் மிகுந்த சந்தேகத்திற்குரிய அமைப்பாக இருப்பது, தேர்தல் ஆணையம். எந்த ஒரு தேர்தலின் முடிவுகள் வெளியானாலும், “நிஜமாகவே மக்கள் அளித்த வாக்குகள்தானா? ஓட்டு மெஷினில் ஏதாவது தில்லுமுல்லுகள் நடந்துவிட்டதா?” என்று எளிய மக்கள் கேட்பது வழக்கமாக உள்ளது. அரசியல் கட்சிகளோ நேரடியாகவே இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. அதற்கு காரணம், மத்திய பா.ஜ.க. அரசின் விருப்பத்திற்கு ஏற்றார்போல தேர்தல் ஆணையம் செயல்படுவதுதான்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவிப்பதில் தொடங்கி, பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு இலட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கம் செய்தது வரை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருபக்க சார்பாகவும், பெரும் சந்தேகங்களை உருவாக்கக்கூடியதாகவுமே உள்ளன. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து மகாராஷ்ட்ரா மாநில சட்டமன்றத் தேர்தலிலும் வெளிப்பட்ட முடிவுகள் பலத்த சந்தேகத்தை உருவாக்கி, சர்ச்சைகளைக் கிளப்பின. பா.ஜ.க.வின் கைப்பாவையாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவந்த நிலையில், அந்தத் தேர்தல்ள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.
நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்காக பா.ஜ.க. 25 தொகுதிகளின் வெற்றியைத் திருடி, ஜனநாயகத்தை சிதைத்திருக்கிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் ராகுல். கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு நாடாளுமன்றத் தொகுதிகளின் முடிவுகளை அந்த எம்பி தொகுதிக்குப் பட்ட மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியின் வாக்குகளின் அடிப்படையில் மேற்கொண்ட புலனாய்வின் முடிவுகளை அவர் வெளியிட்டுள்ளார்.
ஆனால் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மற்ற சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரசுக்கு நல்ல அளவில் வாக்குகள் கிடைத்துள்ளன. இது குறித்து, காங்கிரஸ் மேற்கொண்ட புலனாய்வில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 5 மோசடிகள் கண்டறியப்பட்டிருப்பதாக ராகுல் குற்றம்சாட்டுகிறார்.
ஒரே வாக்காளர் இரண்டு முறை பதிவாகி வாக்களித்திருக்கும் மோசடியை முதலாவதாகக் குறிப்பிட்டுள்ள ராகுல், இப்படி 11,965 வாக்குகள் பதிவாகியுள்ளன. போலியான முகவரிகளில் 48,009 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரே முகவரியில் ஏராளமான வாக்காளர்கள் என்ற வகையில் 10,452 வாக்குகள், தவறான புகைப்படங்களுடன் 4,132 ஓட்டுகள், புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 33, 692. இவை அனைத்தையும் கூட்டினால் வரக்கூடிய எண்ணிக்கை 1,00,250 வாக்குகள். இந்த மோசடிகளைத் தடுத்திருந்தால் அந்த நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க.வின் வெற்றி சவாலாகியிருக்கும். காங்கிரஸ் எளிதாக வெற்றி பெற்றிருக்கும்.
சிங்கிள் பெட்ரூம் கொண்ட ஒரு வீட்டின் முகவரியில் 80க்கும் அதிகமான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, ஒரு பீர் கம்பெனியின் முகவரியில் ஏராளமானவர்கள் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டிருப்பதையும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார். புதிய இளம் வாக்காளர்களுக்கான படிவம் 6ன் மூலம் 70 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்மணியை வாக்காளர்களாக சேர்த்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள ராகுல், அந்தப் பெண்மணியின் பெயர் இரண்டு இடங்களில் இப்படி சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சிலர் நான்கு வாக்குச்சாவடிகளில் பெயர் சேர்க்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 33ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் 25 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதிகளில்தான் அதிகளவில் மோசடிகள் நடைபெற்றிருப்பதாக ராகுல்காந்தி ஆதாரப்பூர்வமாக குற்றம்சாட்டுகிறார். மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தலிலும் இத்தகைய மோசடிகள் அதிகளவில் இருந்ததை அவர் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களைவிட, தேர்தலுக்கு 5 மாதங்களுக்கு முன்பு மிக அதிகளவிலான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டாகும்.
தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பொதுமக்களின் வாக்குகளை பா.ஜ.க. திருடுகிறது என்பதுதான் ராகுலின் பகிரங்க குற்றச்சாட்டு. இதற்கு தேர்தல் ஆணையம் உரிய பதிலளிக்கும் என நம்புவோம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வெளிப்படையான தேர்தல் நடைமுறைகளை தொடர்ந்து வலியுறுத்தும் நிலையில், சி.சி.டி.வி. காட்சிகளை வெளிப்படுத்த மாட்டோம் என்று ரகசியம் காப்பதில் கவனமாக இருக்கிறது தேர்தல் ஆணையம். தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தமும் வெளிப்படைத்தன்மையும் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சியான தி.மு.க. மாநிலத்தில் உள்ள 68ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் பாக முகவர்களை (BLA2) நியமித்துள்ளது. அவர்களுக்கு தேர்தல் நடைமுறைகள் குறித்த பயிற்சிகளை கட்சியின் சட்டத் துறை வழங்கியிருப்பதாலும் தகவல் தொழில்நுட்ப அணி அதனை உன்னிப்பாகக் கவனிப்பதாலும் தேர்தல் முறைகேடுகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் இத்தகைய கட்டமைப்பு இல்லை என்பதே தற்போதைய யதார்த்தம்.
ஜனநாயகத்தில் மக்களுக்கு இருப்பது வாக்குரிமை என்ற ஆயுதம்தான். அதை பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையம் ஆளுந்தரப்பின் கூட்டணியாக செயல்படக்கூடாது.