இந்திய நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதியுடன் அமெரிக்காவுக்கு நான்கு நாள் பயணமாகச் சென்ற ராகுல்காந்தி அங்கு தலாஸ் பல்கலைக்கழகத்திலும், வாஷிங்டன் டி.சி.யில் வெளிநாடு வாழ் இந்தியர்களுடனான சந்திப்பிலும் தெரிவித்த கருத்துகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல் மத்திய அரசின் அமைச்சர்கள் பலரும், பா.ஜ.க.வினரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
“இந்தியவில் சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவார்களா, குருத்வாராவில் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவார்களா என்பதே உரிமைப் போராட்டம்தான்” என்று ராகுல்காந்தி பேசியதற்கு மத்திய அமைச்சர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வெளிப்படுகின்றன. சீக்கியர்களின் உரிமைகளைக் காங்கிரஸ் ஆட்சியில் பறித்ததை ராகுல்காந்திக்கு நினைவுபடுத்த வேண்டுமா என பா.ஜ.க.வினர் ஆவேசமாகக் கேட்கிறார்கள். பிரதமராக இருந்த இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது, டெல்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்ட கொடூர வன்முறையை நினைவுபடுத்துகிறார்கள். “பெரிய ஆலமரம் சாயும்போது கீழே உள்ள செடிகளும் பாதிக்கப்படும்” என்று அப்போதைய வன்முறைக்கு ராகுலின் தந்தை ராஜீவ்காந்தி விளக்கம் கொடுத்தபோது கடும் விமர்சனம் உருவானது. பின்னர், அதே காங்கிரஸ் கட்சிதான் சீக்கியரான டாக்டர் மன்மோகன்சிங்கை பிரதமராக இருமுறை பதவியேற்கச் செய்தது என்பது அரசியல் வரலாறு.
வாஷிங்டன் டி.சி.யில் ராகுல்காந்தி பேசும்போது, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பின்னணியில் பா.ஜ.க. அரசு செயல்படுவதை வெளிப்படையாக விமர்சித்தது பா.ஜ.க. தரப்பில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் தனது பேச்சில், “அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று சொல்கிறது. ஆனால், ஒன்றியம் என்று சொல்வதை ஆர்.எஸ்.எஸ்ஸூம் பா.ஜ.க.வும் ஏற்க மறுக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பன்முகத்தன்மையை ஏற்பதில்லை. தமிழ், வங்காளம் போன்ற மொழிகளின் உரிமைகளை மதிப்பதில்லை. அவர்களைப் போன்றவர்களின் பண்பாட்டை ஏற்பதில்லை. மொழி மற்றும் மதச் சிறுபான்மையினர் உள்ளிட்டவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகும் வகையில் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். நம்முடைய போராட்டம் என்பது அரசியலுக்கானதல்ல. மூடநம்பிக்கைகளுக்கு எதிரானது” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒரு வெளிநாட்டிற்கு சென்று அங்கு இந்தியாவின் நிலை பற்றி இப்படிப் பேசுவது சரியானதா? நாட்டை அவமதிக்கும் செயலாகாதா? என்று பா.ஜ.க. தரப்பினர் கேட்கிறார்கள். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் எப்போதும் இந்தியா உள்ளிட்ட பிறநாடுகளின் பலவீனங்களையே பெரிதுபடுத்தி, உலக அரசியலை இயக்கக்கூடியவை. அப்படிப்பட்ட நாட்டில் இதுபோன்று பேசலாமா என்ற கேள்வியில் நியாயம் தொனிப்பது இயல்பு. அந்த நியாயம் இருதரப்பினருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.
இதுவரையிலான தனது பதவிக்காலத்தில் 60 முறைகளுக்கும் மேல் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு இந்திய மக்களை சந்தித்தபோதும், அரங்குகளில் பேசியபோதும் தனது ஆட்சிக்கு முன்பாக இருந்த இந்தியாவை, அதிலும் குறிப்பாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்து இந்தியாவை தரம் தாழ்த்தியே குறிப்பிட்டிருக்கிறார். தனது தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்தபிறகே உலக நாடுகள் இந்தியாவை மதிக்கின்றன என்பதாகக் கட்டமைப்பதே அவருடைய பேச்சு பாணியாகும். ஜவகர்லால் நேரு முதல் மன்மோகன்சிங் வரை காங்கிரஸ் ஆட்சிக்காலப் பிரதமர்களின் பலவீனப் பகுதிகளை மிகைப்படுத்தி, வெளிநாடுகளில் பதிவு செய்தவர் பிரதமர் நரேந்திர மோடி.
ராகுல்காந்தி இப்போது மோடியின் பலவீனத்தை அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டில் எடுத்துரைத்திருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் நியாயமாக நடந்திருந்தால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்திருக்காது என்றும், தற்போது பெரும்பான்மை இல்லாத பா.ஜ.க அரசு அமைந்திருப்பதன் மூலம் மோடியின் 56 இன்ச் பெருமிதம் தகர்க்கப்பட்டிருக்கிறது என்றும் ராகுல்காந்தி பேசியது அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் வரவேற்பைப் பெற்று, அங்குள்ள ஊடகங்களின் முதன்மை பெற்றிருக்கிறது. இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்படும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டு, இதுநாள் வரை இருந்த அச்சம் விலகியிருக்கிறது என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
இந்திய மக்களுக்கு அச்சம் விலகிவிட்டது என்ற அவரது கருத்துதான், பா.ஜ.க.வுக்கு அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. அதன் விளைவே, உள்துறை அமைச்சர் தொடங்கி கேபினட் மற்றும் இணையமைச்சர்களின் எதிர்ப்புக்கும் காரணமாகும். கடந்த 10 ஆண்டுகளில் மோடி வெளிநாடுகளின் சுவர்களில் விட்டெறிந்த பந்து, இப்போது திருப்பித் தாக்குகிறது. விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?