பங்குச் சந்தையில் ரூ.1.8 லட்சம் கோடி இழந்த சிறு முதலீட்டாளர்களின் பணத்தில் லாபம் பார்த்தவர்கள் யார் யார்? என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அண்மையில் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி, 2023-2024 நிதியாண்டில் பங்குச்சந்தையில் எப் அண்ட் ஓ ஊக வணிகத்தில் முதலீடு செய்த 73 லட்சம் சிறு முதலீட்டாளர்கள் பணத்தை இழந்துள்ளனர். முதலீடு செய்தவர்களில் 91% பேர் பணத்தை இழந்துள்ளனர். தலா ஒரு நபருக்கு 1.2 லட்சம் இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது.
2021-22 மற்றும் 2023-24 ஆகிய 3 ஆண்டுகளில் 1 கோடிக்கும் அதிகமான சில்லறை பங்கு முதலீட்டாளர்கள் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் இழந்திருக்கிறார்கள். அதாவது இவர்களுக்கு ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு 1.8 லட்சம் கோடி ரூபாய் என்பது தெரியவருகிறது.
இதனால் சிறு முதலிட்டாளர்களின் பணத்தில் பெரிய நிறுவனங்கள், பெரும்புள்ளிகள் லாபம் அடைந்திருப்பதாக பேசப்படுகிறது.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார். ‘’எப் அண்ட் ஓ வணிகம் கடந்த 5 ஆண்டுகளில் 45% மேல் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால், இந்த வணிகத்தில் ஈடுபட்ட 90% சிறு முதலீட்டாளர்கள் கடந்த 3 ஆண்டுகளில் 1.8லட்சம் கோடி ரூபாயை இழந்திருக் கிறார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது இவர்களின் முதலீட்டினால் லாபம் பார்த்த பெரும் புள்ளிகளின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும்’’ என்று செபி(இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்)க்கு வலியுறுத்தி இருக்கிறார்.