வெப்ப சலனம் மற்றும் ரிமல் புயலினால் பெய்து வந்த கோடை மழையினால் கொளுத்தும் வெப்பத்தில் இருந்து தப்பித்த மக்கள் மீண்டும் கொளுத்தும் வெப்பம் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தாலும் கூட வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில், அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆ கிய 6 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், 108 டிகிரி வரையிலும் வெப்பம் தாக்கக்கூடும் என்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான். மற்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறைந்த அளவில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வட இந்திய மக்களை கோடை வெயில் வாட்டி வதைத்தெடுத்து வருகிறது. ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்கு அதீத வெயிலுக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் அடுத்த 4 நாட்களுக்கு இதே நிலை தொடரும் என்றும், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 29ம் தேதி வரையிலும் அதீத வெப்பம் இருக்கும் என்றும், அதன் பின்னர் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெயிலின் பிடியில் சிக்கித்தவிக்கும் தமிழக மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விதமாக, தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான அறிகுறிகள் சாதகமாக உள்ளன என்றும், கேரளாவில் இன்னும் ஐந்து தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அணைகள் இந்த தென்மேற்கு பருவ மழையினால் பயன்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.