கொளுத்தும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், ஆரஞ்சு அலர்ட், மஞ்சள் அலர்ட் விடுக்கும் அளவிற்கு திடீரென்று கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பட்டுக்கோட்டையில் 16 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் முதல் நாளான இன்றைய தினத்தில் குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று ராமநாதபுரம், தூத்துக்குடி சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கள் மற்றும் கோவை மலைப்பகுதி, நீலகிரி, திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்குக் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2ம் நாள் நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் 3ம் நாள் 19ம் தேதி அன்று 14மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், 4ம் நாள் 20ன்ம் தேதி அன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், 5ம் நாள் 21ம் ட்ஜ்ஹேதி அன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஐந்து தினங்களிலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
அதாவது 18ம் தேதியான நாளை தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், குமரி, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
19ம் தேதி அன்று குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, நீலகிரி, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.
20ம் தேதி அன்று நெல்லை, குமரி, தேனி, தென்காசி, புதுக்கோட்டை , ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட். சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், நாகை, அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கோவை, நீலகிரி, திருப்பூருக்கு மஞ்சள் அலர்ட்.
21ம் தேதி நெல்லை, தென்காசி, தேனிக்கு ஆரஞ்சு அலர்ட். மதுரை, விருதுநகர், குமரி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகைக்கு மஞ்சள் அலர்ட்.
இது குறித்து வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன், ’’கோடை காலங்களில் கனமழை பெய்ததுண்டு. லைலா போன்ற புயல்களும் வீசியதுண்டு. ஆனால், என் பணி காலத்தில் அலர்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தியதில்லை.
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் நல்ல மழை பெய்யும். ரெட் அலர்ட் என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம் ஆரஞ்சு அலர்ட், மஞ்சள் அலர்ட் என்றால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அர்த்தம்.
பொதுவாக ஐந்து நாட்களுக்குத்தான் முன்னெச்சரிக்கை விடுக்கப்படும். அந்த அளவில்தால் தற்போதும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை இருக்கும். காவிரி டெல்டா பகுதிகளில் கனமழை பெய்யும்.
கோடைமழையால் பருவமழைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பொதுவாக பருவமழையானது தென்மேற்கு திசையில் இருந்து வரும் காற்றானது கேரளா, கர்நாடகா பகுதிகளுக்கு செல்லும்போது ஏற்படும் மழைதான் பருவமழை. தென்மேற்கு பருவமழை இந்த வருடம் இயல்பை விடவும் அதிகமாக இருக்கும். 20 சதவிகிதத்தை தாண்டியதுதான் இயல்பை விட அதிகம்’’ என்று கூறியுள்ளார்.