பாஜக ஆட்சியில் ஊழல் கறை படிந்துவிட்டதாகச் சொல்லி கர்நாடக சட்டமன்ற வளாகத்தில் கடந்த ஆண்டு கோமியம் தெளித்தார்கள் காங்கிரஸ் கட்சியினர். தற்போது, ராஜஸ்தானில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை புனிதப்படுத்துவதற்காக அவர்கள் மீது கோமியம் தெளித்து, குடிக்கவும் வைத்துள்ளார் பாஜக எம்.எல்.ஏ.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் ஹெரிடேஜ் நகர் மேயராக இருந்தவர் முனேஷ் குர்ஜார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அவர் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக குசும் யாதவ்வை மேயராக்கியது பாஜக.
குசும் யாதவ்க்கு 7 காங்கிரஸ் கவுன்சிலர்களும் ஒரு சுயேட்சை கவுன்சிலரும் ஆதரவு அளித்துள்ளனர். இந்த 8 பேரும் பாஜகவில் இணைந்துவிட்டனர்.
பாஜகவில் இணைந்த இந்த 8 கவுன்சிலர்களை புனிதப்படுத்த ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்தார் ஹவா மகால் பாஜக எம்.எல்.ஏ பால்முகுந்த் ஆச்சார்யா.
அந்த 8 பேர் மீதும் கங்கை நீர் மற்றும் கோமியம் தெளித்து, பின்னர் கோமியத்தை குடிக்க வைத்து, ‘’ஊழலில் ஈடுடுபடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட கவுன்சிலர்கள் இனி புனிதமடைவார்கள்’’ என்றார் பால்முகுந்த் ஆச்சார்யா.
இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.