அரிய மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளது பிளாக்ஸ்பக்ஸ் எனும் புல்வாய் மான்கள். சென்னையில் கிண்டி தேசிய பூங்காவிற்கும் ராஜ்பவனுக்கும் இடையில் 30 ஏக்கரில் அமைந்துள்ள போலோ மைதானம்தான்
புல்வாய் மான்களின் வாழ்விடமாக உள்ளது. ஆனால், ராஜ்பவனின் அலட்சியத்தால் போலோ மைதானம் சரியாக பராமரிக்கப்படாததால் புல்வாய் மான்களுக்கு தேவையான புற்கள் கிடைக்காமல், தேவையற்ற புதர்கள் மண்டிக்கிடப்பதாலும் உணவு கிடைக்காமல் தொடர்ந்து அவல நிலையில் உள்ளன புல்வாய் மான்கள்.
கடந்த 2022ம் ஆண்டின் கணக்குப்படி மொத்தம் இருந்த புல்வாய் மான்களே 77 தான். ஆனால், தேவையான புற்கள் இல்லாததால் பட்டினியால் 2022ம் ஆண்டின் கணக்கின் படி 30 புல்வாய் மான்கள் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஞ்சியிருக்கின்ற மான்களையாவது காப்பாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
போலோ மைதானத்தில் புல்வாய் மான்களுக்கு தேவையான பாரம்பரிய புற்கல் வளர்ப்பதற்கு பதிலாக, அந்நிய வகை குறிப்பாக மெக்சிகன் புற்களைக்கொண்டு நட்சத்திர தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் புல்வாய் மான்களுக்கு தேவையான உணவுத்தேவை இல்லாமல் போய்விடுகின்றன. புல்வாய் மான்களுக்கு தேவையான புற்கள் வளர்ப்பதற்குப் பதிலாக பராமரிப்பின்மையால் தேவையற்ற புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. இதனால் உணவு இல்லாமல் பட்டினியால் புல்வாய் மான்கள் வதைபடுகின்றன.
ராஜ்பவன் ஒரு காப்புக்காட்டிற்குள் அமைந்துள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு வனவிலங்கு நலனிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ராஜ்பவனுக்கு கோரிக்கை வைக்கிறார் கேர் எர்த் எனும் பல்லுயிர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.ஜே.ரஞ்சித் டேனியல். அவர் மேலும், 1950ம் ஆண்டு வரையிலும் புல்வாய் மான்களுக்கு ஏற்ற இடமாக இருந்த இடம் காலப்போக்கில் அந்த இனத்தை வாட்டும் இடமாக சுறுங்கிவிட்டது என்கிறார்.
கடந்த 2016ம் ஆண்டு முதல் பாதுகாப்பு காரணங்களுக்காக போலோ மைதானத்தை பராமரிக்க வனத்துறைக்கு அனுமதி வழங்கவில்லை ராஜ்பவன். இதனால் வனத்துறையால் போலோ மைதானத்தை பராமரிக்க முடியவில்லை. ஆனால், ராஜ்பவனுக்கு போலோ மைதானத்தை பராமரிக்கவும், புல்வாய் மான்களை காக்கவும் கடமை இருக்கிறது என்பதை அறிவுறுத்துகின்றனர் விலங்குகள் நல ஆர்வலர்கள்.
’’ராஜ்பவனுக்கும் கிண்டி தேசிய பூங்காவிற்கும் இடையே எல்லையை நிர்ணயிப்பது தொடர்பாக சமீப காலமாக பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இந்த பிரச்சனையில் போலோ மைதானத்தின் பராமரிப்பு என்பது படு மோசமான நிலையில் உள்ளது. இதனால் புல்வாய் மான்களின் நிலைமை பரிதாபத்திற்குள்ளாகி இருக்கிறது’’ என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் டி. முருகவேல், ராஜ்பவனுக்கும் வனத்துறைக்கும் அனுப்பி இருக்கும் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், ராஜ்பவன் ஆளுநரின் செயலாளர் கிர்லோஸ்குமார் அவர்களோ, கிண்டி தேசிய பூங்காவிலும், ராஜ்பவனிலும் புல்வாய் மான்களுக்கு தேவையான மேய்ச்சல் நிலம் உள்ளது என்கிறார். அதே நேரம், தேவைப்பட்டால், வனத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.