
அதிமுக மாஜிக்களில் ராஜேந்திர பாலாஜிக்கு ரொம்பவே வாய் நீளம் என்று அக்கட்சியினரே சொல்வதுண்டு. அந்த வாய் நீளத்தினால்தான் திமுக ஆட்சிக்கு வந்ததுமே ரா.பா. மீது வழக்கு பாய்ந்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது திமுகவையும் அக்கட்சி நிர்வாகிகளையும் கடுமையாக விமர்சித்து வந்தார் ரா.பா. ஏரியா விட்டு ஏரியா சென்று மற்றவர்களுக்காகவும் வாய்ச்சவடால் விட்டு வந்தார். கோவை சென்று எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாகவும் மேடையேறி கொக்கரித்தார் ரா.பா.
இதனால் கடும் ஆத்திரம் கொண்ட மு.க.ஸ்டாலின், அடுத்து திமுகதான் ஆட்சிக்கு வரும். ஆட்சிக்கு வந்ததும் முதல் வேளையே ரா.பா. மீது நடவடிக்கை எடுப்பதுதான் என்று சொல்லி இருந்தார்.

அதே மாதிரி, ஆவின், சத்துணவு, கூட்டுறவு, ஊராட்சி செயலர் உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்ய போலீசார் சென்றபோது தலைமறைவானார்.
டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் அவர் பதுங்கி இருப்பதாக அவ்வப்போது தகவல் பரவியது. பின்னர் கர்நாடகா மாநிலத்தில் பதுங்கியிருந்தவர் போலீசாரைப் பார்த்ததும் காரில் தப்பி ஓடினார். பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அவரை துரத்திச்சென்று மடக்கிப்பிடித்து போலீசார் கைது செய்தனர்.
மோசடி வழக்கில் சிக்கியும், அவர் திட்டத்துல கமிஷன் அடிப்பதை நியாயப்படுத்தி பேசி இருக்கிறார்.
’’திட்டத்துல ஏதாவது வேலை செஞ்சி சாப்பிடலாம். திட்டத்துல கொஞ்சம் கமிஷன் பாக்கலாம். ஒரு கோடி ரூபா திட்டத்துல 5% கமிஷன் அடிச்சா தமிழ்நாட்டு மக்கள் அத கண்டுக்க மாட்டாங்க’’ என்று பேசி இருக்கிறார்.
இதற்கு, ‘’மக்கள் கண்டுகொள்ள மாட்டாங்கதான். ஆனா, நீதிமன்றமும் கண்டுக்கொள்ளாமல் இருக்குமா?’’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அதிமுக மாஜிக்கள் பலரின் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், ரா.பா.வின் இந்த ஒப்புதல் வாக்குமூல உளறல் பேச்சு அவர்களை குமுற வைத்திருக்கிறது.