ஓபிஎஸ் – உதயகுமார் பஞ்சாயத்து முடிந்த நிலையில் செல்வப்பெருந்தகை – ராஜேஷ்குமார் பஞ்சாயத்து தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார் செல்வப்பெருந்தகை. இதனால் அவருக்கு பேரவையில் முன்வரிசையில் இடம் கிடைத்தது. திடீரென்று கடந்த பிப்ரவரி மாதம் அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டதால், சட்டப்பேரவையில் அவர் வகித்து வந்த காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜேஷ்குமாருக்கு வழங்கியது டெல்லி தலைமை.
இத்தனை காலமும் பேரவையில் முன்வரிசையில் அமர்ந்து பழக்கப்பட்ட செல்லவப்பெருந்தகைக்கு திடீரென்று பின்வரிசையில் சென்று அமர மனம் இடங்கொடுக்கவில்லை. அதனால்தான் சட்டப்பேரவை தலைவருக்கு செல்வப்பெருந்தகை கடிதம் கொடுக்கவில்லை. அவர் கடிதம் கொடுத்தால்தான் ராஜேஷ்குமாருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்குவார் சபாநாயகர். டெல்லி தலைமை நியமனம் செய்ததை அங்கீகாரம் செய்து இன்னமும் கடிதம் கொடுக்காமல் இழுத்தடிப்பது நியாயமா? என்று கேட்கிறது ராஜேஷ்குமார் தரப்பு.
விரைவில் சட்டமன்றம் கூடவிருப்பதால் அதற்குள் கடிதம் கொடுத்தால்தானே ராஜேஷ்குமாருக்கு உரிய நாற்காலி கிடைக்கும் என்கிறது அவரது தரப்பு.
ஆனால், செல்வப்பெருந்தகை இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ளார். அகில இந்திய தலைமை அறிவிப்பு செய்தவுடனேயே அதை அங்கீகாரம் செய்து சட்டப்பேரவைக்கு அனுப்பி விட்டேன். இதில் சந்தேகம் இருந்தால் சட்டப்பேரவை செயலாளரிடம் கேட்டு தெள்வு பெறலாம் என்கிறார். 22.02.2024 அன்று தான் எழுதிய கடிதத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘’மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றம், தலைமைச்செயலகம், சென்னை – 600009
மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களுக்கு வணக்கம். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் காங்கிரஸ் கட்சித்தலைவராக திரு.ராஜேஷ்குமார் அவர்களை 17.02.2024 அன்று நியமித்துள்ளார். எனவே, தாங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சி தலைவராக அறிவிப்பு செய்து அவருக்கு அப்பதவிக்குரிய இருக்கை ஒதுக்கீடு செய்திட தங்களை கேட்டுக்கொள்கிறேன். இத்துடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கடிதத்தின் நகல் இணைக்கப்பட்டுள்ளது.’’ என்று உள்ளது
சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனோ, அப்படி ஒரு கடிதம் எங்களுக்கு இன்னமும் வரவில்லை என்கிறார். கடிதம் பெற்ற பிறகுதான் ராஜேஷ்குமாருக்கு உரிய இருக்கை ஒதுக்க முடியும் என்றும் சொல்லி இருக்கும் அவர், சபாநாயகருக்கு நேரடியாக கடிதம் சென்றிருக்கிறதோ? என்ற சந்தேகத்தை எழுப்ப, சட்டப்பேரவை செயலாளர் சொன்னது சரியாகத்தான் இருக்கும். கடிதம் வந்திருக்காது. அப்படி வந்திருந்தால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னர் அலுவலகத்திற்கு சென்று பார்த்தால்தான் தெரியும் என்று விளக்கமளித்திருக்கிறார் சபாநாயகர் அப்பாவு.