ரஜினியின் ஸ்டைலை பின்பற்றித்தான் விஜய் நடிக்க ஆரம்பித்தார். இதை அவரே வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். ரஜினியும் விஜய்யை பல இடங்களில் பாராட்டிப்பேசி இருக்கிறார். ஆனாலும் இருவருக்குள்ளும் என்ன நடந்ததோ தெரியவில்லை; பாபா படத்தின் தோல்வியை ஸ்டார் ஓட்டலில் பார்ட்டி வைத்து விஜய் கொண்டாடினார் என்ற பேச்சு இருக்கிறது.
சூப்பர்ஸ்டார் நாற்காலியை விஜய் பிடிக்க ஆசைப்பட்டது முதற்கொண்டே ரஜினிக்கும் விஜய்க்குமான மோதல் வேகமெடுத்தது. ரஜினி சொன்ன ‘காக்கா – கழுகு’ கதைக்கு பிறகு இந்த மோதல் அதிகமானது. ஆனால் விஜய் கட்சி தொடங்குகிறார் என்றதுமே அதற்கு ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு, ஒதுங்கிவிட்டார் ரஜினி.
வேட்டையன் பட விழாவிலும் கூட விஜய் குறித்து எந்த தாக்குதலும் செய்யவில்லை ரஜினி. ஆனாலும் விஜய் ரசிகர்கள் இன்னமும் மோதல் போக்குடனேயே உள்ளனர்.
ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாகவும், அதே சமயத்தில் சமூகத்திற்கு தேவையான நல்ல மெசேஜ் உடன் வந்திருக்கும் வேட்டையனை குடும்பத்துடன் சென்று கொண்டாடலாம் என்று ரசிகர்கள் கருத்து சொல்லி வரும் நிலையில், வேட்டையன் படத்தின் முதல் பாதி செம விறு விறு என்று பலரும் சொல்லி வரும் நிலையில், வேட்டையன் ஒரு படமே இல்லை. எல்லோரும் தூங்கிவிட்டார்கள் என்று விஜய் ரசிகர்கள் சொல்வதோடு மட்டுமல்லாமல் அதற்கேற்றவாறு போட்டோ மற்றும் வீடியோக்களை கிரியேட் செய்து பரப்பி வருகின்றனர்.
ரஜினி ரசிகர்களுடன் அஜித் ரசிகர்களும் ஒற்றுமையாக இருப்பதால், அஜித்தின் பல மன மாற்றங்களுக்கு ரஜினியின் அட்வைஸ்தான் காரணம் என்பதால் அஜித் ரசிகர்களையும் சேர்த்தே அதாவது ரஜினியும் அஜித்தும் அடிவாங்குவது மாதிரி மீம்ஸ் போட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
குறி வச்சா இரை விழணும் என்று வேட்டையனில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக்கை வைத்து, #குறிவச்சதுபோதும்_கொஞ்சம்குனி என்று எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக உச்சக்கட்டமாக ரஜினியின் படத்தின் முன் ஸ்வீட்ஸ், பழங்கள் வைத்து சடங்குகள் செய்வது மாதிரி சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இதனால் ஆத்திரம் கொண்டு விஜய்யை வேட்டையன் அடித்து வீழ்த்துவது போன்ற படத்தை ரஜினி ரசிகர்கள் பரப்பி வருகின்றனர்.
’’மவனே, அரசியலுக்கு வா.. சம்பவம் இருக்கு’ என்று ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள்.
எங்கே செல்லும் இந்தப் பாதை…?