
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க முற்பட்டபோது, தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்று கூறினார். இதனால் கழக கட்சிகளை போல ரஜினியின் ஆட்சி இருக்காது; அது ஆன்மிக ஆட்சியாகத்தான் அமையும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அரசியலே வேண்டாம் என்று ரஜினி ஒதுங்கிவிட்ட பின்னர் அந்த ஆன்மிக அரசியல், ஆன்மிக ஆட்சி என்பது ஒதுங்கி இருந்தது.
தற்போது அண்ணாமலை அந்த வார்த்தைகளை தட்டி எழுப்பி இருக்கிறார்.

தமிழக பாஜகவின் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கோவையில் காமாட்சிபுரி ஆதுனம், 51 சக்தி பீடத்தில் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளின் 31ஆவது ஜெயந்தி விழாவில் பங்கேற்றார்.
இவ்விழாவில் அவர் பேசியபோது, ‘’ராஜாவாக இருந்தாலும் சன்னியாசிகள் முன்பாக தரையில்தான் உட்கார வேண்டும். முதலமைச்சரோ, ராஜாவோ யாராக இருந்தாலும் அவர்கள் என்றைக்கு சன்னியாசிகள் முன்பு தரையில் உட்கார ஆரம்பிக்கிறார்களோ என்றைக்குத்தான் உண்மையான ஆன்மிக ஆட்சி வந்துவிட்டது என்று அர்த்தம். தமிழகத்தில் விரைவில் ஆன்மிக ஆட்சி அமையும். இது நிச்சயமாக நடக்கும்’’ என்றார்.

’’எங்கு பார்த்தாலும் அரோகராவும், சிவ கோஷமும் ஒலிக்கின்றது. தேவாரம், திருவாசகம், பன்னிரு முறைகள் பாடுகின்ற ஆன்மிக ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சியை நடத்துகிறார் முதல்வர்’’ என்று சொல்கிறார் அமைச்சர் சேகர்பாபு. ஆனால் அண்ணாமலையோ, இனிதான் ஆன்மிக ஆட்சி மலரும் என்கிறார்.