அரசியலில் யார் சூப்பர் ஸ்டார்? என்று நாதக – பாஜகவிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் சந்தித்து 2 மணி நேரம் 15 நிமிடங்கள் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. சீமான் தலைமையில் கூட்டணி அமைகிறது. அதில் பாஜகவும் இணைகிறது என்றும், அந்த அணிக்கு தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ரஜினியிடம் சீமான் பேசியதாக தகவல் பரவுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் சீமான் இணையப் போவதாகவும், சீமான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட போவதாகவும், அந்த கூட்டணிக்கு ரஜினி வாய்ஸ் கொடுக்கப்போவதாகவும் செய்திகள் வருகின்றன.
பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் சீமான் சங்கி என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில், சீமானின் வெள்ளை நிற உடையில் காவி உடையாக்கி அட்டைப்படம் போட்டது பிரபல வார இதழ்.
இது கண்டு கொதித்துப்போன சீமான், ’’நானும் ஐயா ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் சந்தித்தோம். என்ன பேசினோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். அதை சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கும் இல்லை. எனக்கும் இல்லை.
ஒரே ஒரு முறை நானும் அவரும் சந்தித்ததுக்கு ஏன் இப்படி ஐயோ ஐயோ என்று குதிக்கிறார்கள்? அவர் திரையுலகில் சூப்பர் ஸ்டார். நாம் அரசியலில் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் சந்தித்ததால் பயந்துவிட்டார்கள்’’ என்றார்.
காவி நிறம் குறித்து சீமான் ஆத்திரப்பட்டதற்கு பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், ‘’காவி என்பது பாஜகவுக்கு சொந்தமானது கிடையாது. காவி என்பது பாரம்பரியமானது, சனாதனத்தைக் குறிக்கிறது என்கிறார்.
சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடுத்தவர்தான் தர வேண்டுமே தவிர, சீமான் தனக்குத்தானே வைத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்லும் வானதி சீனிவாசன், அரசியலில் சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடிதான் என்கிறார்.