Article Originally Published in English by Scroll.in | Translated in Tamil by Ashok Murugan
இந்துத்துவ அமைப்பின் நீண்ட கால கோரிக்கையின் உச்சமாக வரும் ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி மற்றும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் (RSS) சங்கத்தால் தான், ராமர் கோயில் கட்டுவதற்கான முக்கிய உந்து சக்திகளாக இருந்ததாக கருதப்படுகிறது.
ஆனால், நீதித்துறையும் அதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. உண்மையில், 1940-களில், பாபர் மசூதி இந்து வழிபாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டு 1986-ல் பாபர் மசூதி பூட்டுகள் திறக்கப்பட்டது. இறுதியாக 2019-ல் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது வரை, நீதித்துறை உத்தரவின் விளைவாகவே ஒவ்வொரு நிகழ்வும் நடந்துள்ளது.
சர்ச்சையின் ஆரம்பம்
மதம் மற்றும் அரசியல் காரணங்களுக்கு அப்பாற்பட்டு, அயோத்தி வழக்கு ஒரு நிலத்தின் உரிமைப் பற்றிய சிவில் தகராறாகும்.
1885-ம் ஆண்டு, ரகுபீர் தாஸ் என்பவர் பாபர் மசூதிக்கு அருகில் ஒரு இந்து கோயிலைக் கட்ட முயற்சித்தார்; அதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால், பைசாபாத் துணை நீதிமன்றத்தில் கோயில் கட்ட உரிமை கோரி வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கு 1885-ல் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக தொடர்ந்த அவரது மேல்முறையீட்டு மனுவும் அடுத்த ஆண்டு பைசாபாத் மாவட்ட நீதிபதியால் தள்ளுபடியானது.
மசூதிக்குப் பக்கத்தில் கோவிலைக் கட்ட அனுமதிப்பது வகுப்புவாத பதட்டத்தைத் தூண்டும் என்கிற அடிப்படையில் இருமுறையும் அந்த வழக்குகளை பைசாபாத் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இருப்பினும், அந்த இரண்டு தீர்ப்புகளும் ‘இந்துக்களுக்கு சொந்தமான புனித நிலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்கிற உறுதிப்படுத்தப்படாத கோட்பாட்டிற்கு நம்பகத்தன்மையை அளித்தது.
மசூதியில் இந்துக்கள் வழிபாடு
1949-ம் ஆண்டு வரை, பாபர் மசூதியில் இஸ்லாமியர்கள் தொடர்ந்து தொழுகை நடத்தி வந்தனர்.
இந்த சூழலில், 1949-ம் ஆண்டு டிசம்பர் மாதம், பைசாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் நகர மாஜிஸ்திரேட் ஆகியோரின் ஒத்துழைப்போடு, ராம் லல்லா (குழந்தை ராமர்) சிலை இரவு நேரத்தில் மர்மமான முறையில் கொண்டுவரப்பட்டு, மசூதிக்குள் இந்துத்துவா குழுக்களால் வைக்கப்பட்டது.
இதனால் அயோத்தியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததால், அதைத் தடுக்க மசூதி வளாகம் முழுவதும் நகராட்சி வாரியத்தின் பாதுகாப்புப் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜனவரி 1950-ல், நகராட்சி வாரியம் மசூதியின் நுழைவாயிலை பூட்டியது.
1950-ம் ஆண்டில், மசூதி வளாகத்தில் ராமரை வழிபட அனுமதிக்கவும் உள்ளே இருக்கும் சிலையை அகற்றுவதைத் தடுக்கக் கோரியும் இந்து பக்தர் ஒருவர் பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
1951-ம் ஆண்டில், இந்த வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம், சிலைகளை அகற்றக்கூடாது என்று உத்தரவிட்டும், மசூதியின் வளாகத்தின் வெளிப்புற முற்றத்தில் இந்துக்கள் பிரார்த்தனை செய்வதற்கான உரிமையை வழங்கியும் உத்தரவிட்டது. இதை அலகாபாத் உயர்நீதிமன்றமும் 1955ல் உறுதி செய்தது.
இந்திய நீதித்துறையின் அந்த உத்தரவுகளின் விளைவால், மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபடத் தொடங்கி, மசூதி தனது தன்மையை இழந்து ஒரு கோயிலாக மாறியது.
மசூதியின் பூட்டு திறப்பு
1959 ஆம் ஆண்டில், நிர்மோஹி அகாரா என்ற இந்து மதப் பிரிவினரும், சாமியார் ரகுநாத் தாஸ் என்பவரும், மசூதியின் உரிமையை வழங்கவும் கோயிலாக நிர்வகிக்கக் கோரியும் வழக்குத் தொடர்ந்தனர். அதேபோல் 1961-ம் ஆண்டில், சன்னி மத்திய வக்ஃப் வாரியம் (Sunni Central Board of Waqfs) நிலத்தை ஒப்படைக்கவும், அந்த கட்டமைப்பை மசூதியாக அறிவிக்கவும் வழக்குத் தொடர்ந்திருந்தது.
அந்த வழக்குகள் விசாரிக்கப்படாமல் அடுத்த 10 ஆண்டுகளாக பைசாபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்ததன.
இந்த சூழலில் 1986-ம் ஆண்டில், அந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்த பைசாபாத் மாவட்ட நீதிமன்றம் மசூதியின் கதவுகளைத் திறக்க உத்தரவு பிறப்பித்தும், இந்து பக்தர்கள் வளாகத்தில் பிரார்த்தனை செய்யலாம் என கூறியும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.
மேலும், கடந்த 35 ஆண்டுகளாக இந்த வளாகத்தில் பிரார்த்தனை செய்ய இந்துக்களுக்கு உரிமை இருந்து வந்துள்ளது என்றும், அந்த காலக்கட்டத்தில் முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்யவில்லை என்றுக் கூறியும் நீதிமன்றம் தனது முடிவை நியாயப்படுத்தியது.
மசூதியின் பூட்டைத் திறப்பது சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்காது என்று மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் பைசாபாத் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உறுதியளித்துள்ளதால், பூட்டுகளை திறக்க நீதிமன்றம் உத்தரவிடுவதாக கூறியது.
மசூதி இடிப்பு மற்றும் 1994 உச்சநீதிமன்ற தீர்ப்பு
டிசம்பர் 1992-ல், பாபர் மசூதி இந்துத்துவ கும்பலால் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஒரு தற்காலிக கோயில் அமைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால், சர்ச்சைக்குரிய நிலத்தை கையகப்படுத்துவதாக கூறி அப்போதய மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றியது. அந்த அவசரச் சட்டத்தில் இந்துக்கள் மசூதி வளாகத்தில் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்யவும் இது தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படவும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இறுதியாக 3:2 பெரும்பான்மையுடன், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை உறுதிப்படுத்தியது, ஆனால் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தடுக்கும் விதியை ரத்து செய்தது.
இதன் விளைவாக, சர்ச்சைக்குரிய தளம் தொடர்பான தலைப்பு வழக்குகள் புதுப்பிக்கப்பட்டன.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் முயற்சியால், இந்த பிரச்சனைகள் தொடர்பான அனைத்து வழக்குகளும் 1989-ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இருந்தது.
தொடர்ந்து வழக்கை விசாரித்து வந்த உயர் நீதிமன்றம் 2010-ல் சர்ச்சைக்கு தீர்வை வழங்கியது
நிலத்தை மூன்றாகப் பிரித்து, சன்னி வக்ஃப் வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா விராஜ்மான் ஆகிய அமைப்புகளுக்கு வழங்கி உத்தரவிட்டது.
அனைத்து தரப்பினரும் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால், 2011-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
அடுத்த சில ஆண்டுகளாக, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு
ஜனவரி 2019-ல், இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய், இறுதியாக இந்த வழக்கை விசாரித்து இறுதி முடிவெடுக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமரவை அமைத்தார்.
2019 ஆகஸ்ட், செப்டெம்பர், மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நவம்பர் மாதத்தில் இறுதி தீர்ப்பை வழங்கியது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பில், மசூதி வளாகத்தின் உரிமையை ராம் லல்லா விராஜ்மான் அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டது.
இருப்பினும், 1949 இல் மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்ட நிகழ்வு மற்றும் 1992-ல் மசூதி இடிக்கப்பட்டத்தை சட்டவிரோதமானது என்று ஒப்புக்கொண்டது.
அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு சன்னி வக்பு வாரியத்துக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்றும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சட்ட வல்லுனர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
பாபர் மசூதி தொடர்பான இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டு அடுத்த 4 மாதங்களில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
நீதிபதி எஸ்.அப்துல் நசீரும், ஓய்வு பெற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு ஆந்திரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
மற்றொரு நீதிபதியான நீதிபதி அசோக் பூஷன், ஓய்வு பெற்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்(National Company Law Appellate Tribunal) தலைவராக நியமிக்கப்பட்டார்.
Courtesy: Scroll.in