பாமக என்றாலே ’தைலாபுரம் தோட்டம்’தான் என்று இருந்த நிலை இப்போது தைலாபுரம் – பனையூர் என இரண்டாக பிரிந்திருக்கிறது. இந்த மாற்றத்திற்கு காரணம் முகுந்தன்.
பாமவின் இளைஞரணி தலைவராக இருந்து வந்த அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதற்காக அவரை கட்சியின் தலைவர் ஆக்கினார் நிறுவனர் ராமதாஸ். அதுவரை கட்சி தலைவராக இருந்து வந்த ஜி.கே.மணி கவுரவ தலைவர் ஆக்கப்பட்டார்.
தலைவர் பதவியை ஜி.கே.மணி தியாகம் செய்ததால் இளைஞரணி தலைவர் பதவியை அவரது மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரனுக்கு வழங்கினார் ராமதாஸ். ஆனால், ‘லைகா புரடக்ஷன்ஸ்’ சினிமா தயாரிப்பில் பிஸியாக இருப்பதால் தன்னால் கட்சி பொறுப்பை சரிவர கவனிக்க முடியவில்லை என்று சொல்லி, இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார்.
இதையடுத்த அந்த பதவி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் இருந்து வந்தது. கடந்த 28ஆம் தேதி அன்று புதுச்சேரியில் நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், ‘’பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிக்கிறேன். அவர் அன்புமணிக்கு உதவியாக இருப்பார்’’ என்று சொன்னார் ராமதாஸ்.
உடனே இதை எதிர்த்தார் அன்புமணி. ’’எனக்கு உதவி வேண்டாம். அவன் கட்சியில சேர்ந்தே நாலு மாசம்தான் ஆகுது. அவனுக்கு பதவியா?’’ என்று வெடித்தார் அன்புமணி.
அதற்கு ராமதாஸ், ‘’இது என் கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும். விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறிவிடலாம்’’ என்று ஆத்திரப்பட்டார். இதனால் கடுப்பான அன்புமணி, மைக்கை தூக்கி வீசினார். பின்னர் எழுந்து, தனக்கு பனையூரில் அலுவலகம் உள்ளது என்றும், தன்னை இனி தொடர்புகொள்ள விரும்புவோர் அங்கே வரலாமென்றும் அறிவித்தார்.
பொதுக்குழு மேடையிலேயே நடந்த இந்த மோதல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
மறுதினமே தைலாபுரம் சென்ற அன்புமணி, ராமதாசை சந்தித்து பேசினார். அதன் பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’பாமக ஒரு ஜனநாயக கட்சி. அங்கே விவாதங்கள் இருக்கத்தான் செய்யும். இது உட்கட்சி விவகாரம்’’ என்று சொன்னார்.
தனக்கு வேண்டப்பட்ட நபரை இளைஞரணி தலைவராக நியமித்து தன் கைக்குள்ளேயே வைத்திருக்க நினைத்திருக்கிறார் அன்புமணி. அதற்கு இடம் கொடுக்கவில்லை ராமதாஸ். தன் மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்த் பரசுராமனை நியமித்துவிட்டார்.
தன்னால் கட்சிக்குள்ளும், அப்பா -மகன் உறவுக்குள்ளும் பிரச்சனை வேண்டாம் என்று சொல்லி இளைஞரணி பொறுப்பை உதறிவிட்டு, கட்சியின் உறுப்பினராகவே இருக்கப் போவதாக முகுந்த் தரப்பில் இருந்து செய்திகள் கசிந்தன.
ராமதாஸ் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதை தெரிந்துகொண்ட அன்புமணி, பொதுக்குழு மேடையில் சொன்னபடியே, பனையூரில் தன் அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களை நேற்று சந்தித்தார்.
இந்நிலையில் இன்று இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ‘’பாமக பொதுக்குழுவில் நடந்தது உட்கட்சி விவகாரம். அதில் ஏற்பட்ட விவகாரத்தில் எனக்கும் அன்புமணிக்கும் உண்டானது கருத்து மோதல். அது சரியாகிவிட்டது. பாமக இளைஞரணி தலைவர் முகுந்தன் தான். பொதுக்குழுவில் அறிவித்து, அதன்படி நியமனக்கடிதமும் கொடுத்து விட்டேன். அதில் இனி எந்த மாற்றமும் இல்லை’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
’’இப்படித்தான் அவர் சொன்னதற்கெல்லாம் தலையாட்டியதால்தான் கட்சி இன்றைக்கு இந்த அளவுக்கு போய்விட்டது’’ என்று அன்புமணி இத்தனை சொல்லியும் ராமதாஸ் பிடிவாதமாக இருப்பதற்கான காரணங்கள் என்னவென்று தைலாபுரத்தில் இருந்து தகவல் கசிகின்றன.
’’2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிதான் என்று அன்புமணி பிடிவாதம் பிடித்ததில் இருந்தே அவர் மீது ராமதாஸ் ஏக கடுப்பில் உள்ளார். 2014ல் அன்புமணியின் விருப்பத்தின் பேரில்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்தோம். அந்த தேர்தலில் அன்புமணி மட்டுமே வென்றார். அடுத்து 2016 தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற அன்புமணியின் விருப்பத்தினை ஏற்றதால் அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தோம். இதனால் 2019ல் அதிமுகவோடு கூட்டணி வைத்தார் ராமதாஸ். அந்த தேர்தலில் தோற்றாலும் கூட, ராஜ்யசபா சீட் கொடுத்தது அதிமுக. 2021 தேர்தலிலும் கூட அதிமுக கூட்டணியில் 5 சீட் கிடைச்சது.
2024ல் பாஜகவில் இருந்து விலகி அதிமுக நின்றபோது அதிமுக பக்கம் இருப்பதுதான் புத்திசாலித்தனம் என்று சொன்னார் ராமதாஸ். மத்திய அமைச்சர் கிடைக்கும் என்று சொல்லி பாஜகவுக்கு ஆதரவு அளித்தார் அன்புமணி. அந்த தேர்தலில் படு தோல்வி அடைந்ததும், கள்ளக்குறிச்சியில் 4ஆவது இடத்திற்கு கட்சி போனதை எல்லாம் நினைத்து ரொம்பவே வருந்தினார் ராமதாஸ். அதிமுகவில் இருந்திருந்தால் சில தொகுதிகள் பெற்றிருக்கலாம். ராஜ்யசபா சீட்டும் கிடைச்சிருக்கும் என்று வேதனைப்படுகிறார்.
இந்த நிலைமையில், கட்சியினர் தொடர் தோல்விகளால் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு 2026 தேர்தலில் டெல்லி கனவில் இருந்து தமிழ்நாட்டில் கோட்டை விட்டு விடக்கூடாது என்று அன்புமணியிடம் எச்சரித்துள்ளார் ராமதாஸ்.
என்னதான் அன்புமணி தலைவர் என்றாலும், கட்சியின் முழு கட்டுப்பாடும் ராமதாசிடம் தான் உள்ளது. அதனால் அன்புமனி இனி அவர் இஷ்டத்திற்கு எந்த முடிவும் எடுக்க முடியாது. 2024ல் விட்டது மாதிரி 2026ல் அன்புமணி முடிவுக்கு விட மாட்டார் ராமதாஸ்’’ என்கிறது தைலாபுரம் வட்டாரம்.
சரியாகிவிட்டது என்று முகுந்தன் பரசுராம் விவகாரத்தினை மட்டுமே சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது ராமதாஸ். உட்கட்சி விவகாரங்கள் இன்னமும் எரிந்து கொண்டு தானிருக்கிறது.