
’’எனக்கா?’’
‘’ஆமாம்!’’
‘’எனக்கெல்லாம் வேணாம்..’’
”…..”
’’ கட்சியில வந்து நாலு மாசம்தான் ஆகுது. என்ன அனுபவம் இருக்குது? அவனுக்கு கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியா?’’
‘’நான் சொல்லுறதுதான்…’’
‘’ நீங்க சொல்லுங்க; பண்ணுங்க..’’
’’யாரா இருந்தாலும் நான் சொல்லுறததான் கேட்கணும்’’
‘’ஏதோ பண்ணுறீங்க; பண்ணுங்க..’’
‘’நான் சொல்லுறத கேட்கலேன்னா யாரும் இந்த கட்சியில இருக்க முடியாது. இது நான் உண்டாக்குன கட்சி. நான் சொல்லுறத கேட்கலேன்னா யாரும் இந்த கட்சியில இருக்க முடியாது’’
‘’அது சரி’’
‘’என்னா..சரிசரின்னு…போ.. அப்ப..’’
-கடந்த 2024இல் டிசம்பர் மாதத்தில் நடந்த பாமக பொதுக்குழுவில் ‘’அன்புமணிக்கு உதவியாக முகுந்தனை பாமக இளைஞரணிச் செயலாளராக நியமிக்கிறேன்’’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறித்தபோது அவருக்கும் அருகே அமர்ந்திருந்த அன்புமணிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைதான் மேலே உள்ளவை.

மேடையிலேயே நடந்த இந்த வாக்குவாதம் பரபரப்பாக பேசப்பட்டது. மறுநாளே ராமதாசும் அன்புமணியும் சமாதானம் ஆகிவிட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இன்று வரையிலும் இந்த மோதல் தொடர்கிறது.
முகுந்தன் நியமனத்திற்கு அன்புமணி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்ததால் அன்புமணி வசம் இருந்த தலைவர் பதவியை தானே எடுத்துக்கொண்டார் ராமதாஸ். தலைவராக இருந்த அன்புமணியை செயல் தலைவராக்கினார்.
இதில் தந்தை – மகனுக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது. மேலோட்டமாகப் பார்த்தால் இது தந்தை மகன் மோதல். ஆனால் உள்ளே சென்று பார்த்தால் மாமனார் – மருமகள் மோதல் என்றும் சொல்கிறது தைலாபுரம் வட்டாரம்.
அண்மையில் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டு மேடையில் முகுந்தனுக்கு நாற்காலி ஒதுக்க அன்புமணி சம்மதிக்கவில்லை. இதனால் கடுப்பான ராமதாஸ், மேடையில் யாரும் அன்புமணியை தலைவர் என்று சொல்லக்கூடாதென உத்தரவு போட்டுவிட்டார்.

அந்த மேடையில் ராமதாசும் அன்புமணியும் கடுகடுவென்றிருந்தனர். அந்த மாநாட்டிற்காக மூன்று மாதங்களாக அன்புமணி உழைத்திருந்தும் அவரை மேடையில் பாராட்டவில்லை ராமதாஸ். மாறாக, தன்னை மீறி செயல்பட்டால் கட்சியை விட்டே நீக்கிவிடுவேன் என்று அன்புமணியையும் அவரது ஆதரவாளர்களையும் கடுமையாக எச்சரித்தார் ராமதாஸ்.
இது அன்புமணியையும் அவரது ஆதரவாளர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, மேடையில் முகுந்தனுக்கு நாற்காலி ஒதுக்க சம்மதிக்காத, தான் சொல்லுவதைக் கேட்காக அன்புமணியை கட்சியை விட்டே நீக்க முடிவெடுத்திருக்கிறார் ராமதாஸ் என்று தகவல் பரவுகிறது.
மாநாட்டைத் தொடர்ந்து தைலாபுரத்தில் நடந்த மா.செ.க்கள் கூட்டத்திற்கு அன்புமணியும் அவரது ஆதரவாளர்களும் வரவில்லை. ராமதாசின் ஆதரவாளர்கள் சிலர் மட்டுமே வந்திருந்தனர். இதனால் அதிருப்தியான ராமதாஸ் தனது கோபத்தை கொஞ்சம் குறைத்துக்கொண்டே அன்று பேசினார்.
இன்று நடந்த வன்னியர் சங்க கூட்டத்திற்கு அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. வந்தால் நல்லது என்று சொன்னார் ஜி.கே.மணி. இன்றைக்கும் அன்புமணி வரவில்லை.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு முதல் நாள் இரவில் மா.செக்களை தைலாபுரம் தோட்டத்திற்கு வரவைத்து அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்க வேண்டும் என்று எழுதி அதில் மா.செக்களிடம் கையெழுத்து பெறப்பட்டாகவும், வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு அதில் அன்புமணியை நீக்க சம்மதம் என்று எழுதிக்கொண்டதாகவும், இது தெரிந்துதான் அன்புமணி மறுநாள் நடந்த மா.செக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவரது ஆதரவாளர்களும் பங்கேற்கவில்லை என்று தகவல் பரவுகிறது.
பாமக ஜி.கே.மணி இதை மறுக்கிறார். ’’கையெழுத்து வாங்கிக்கொண்டு அன்புமணியை நீக்குவதாக குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள். இது தேவையற்ற குழப்பம். இந்த வதந்தியை பரப்பியதால்தான் தேவையற்றம் குழப்பம் வந்தது. இது பெரிய வேதனையை அளிக்கிறது.

மத்திய அமைச்சராக இருந்து சாதனை படைத்தவர் அன்புமணி. அவருடைய சாதனைக்கு நிகர் அவரேதான். மருத்துவர் அய்யா 45 வருசமாக துணிச்சலாக போராடி வருகிறார். ஒரு இயக்கம் எப்படி போக வேண்டும் என்பதில் தெளிவாக, உறுதியாக உள்ளார். ரெண்டு சக்தியும் பெரிய சக்திதான். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களை சந்திக்கும் நாள் வரும்’’ என்றார்.
நள்ளிரவுக் கூட்டம் , வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து எல்லாமே வதந்தீ… என்றார் ஜி.கே.மணி. ராமதாசும் கூட அது வதந்தீ… என்றே சொல்கிறார்.
அன்புமணி இதுவரையிலும் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை.