சாதாரண படங்களுக்கே இது பார்ட்-1, பார்ட்-2 காலம் என்பதால் பயோபிக் சினிமாக்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன? இளையராஜாவின் பயோபிக் இரண்டு பாகங்களாக தயாராகிக் கொண்டிருப்பதைப் போல் பாமக நிறுவனர் ராமதாசின் பயோபிக் சினிமாவும் இரண்டு பாகங்களாக தயாராக உள்ளது.
ராமதாசின் இளமைக்காலம் வரையிலும் முதல் பாகம் என்றும், அதாவது ராமதாஸ் டாக்டருக்கு படித்து மருத்துவ பணி செய்து பின்னர் அரசியல் தலைவராக உருவெடுப்பது வரை முதல் பாகமாகவும், அதற்கடுத்த ராமதாசின் வாழ்க்கைப்பக்கங்கள் இரண்டாவது பாகமாகவும் தயாராக இருக்கிறது.
இயக்குநர் சேரன் இந்த பயோபிக் சினிமாவை இயக்க உள்ளார். சரத்குமார் இந்த சினிமாவில் ராமதாஸ் பாத்திரத்தில் நடிப்பதாக இருந்து விலகிவிட்டார். அதே போன்று லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாக இருந்து அந்த நிறுவனமும் பின்வாங்கிவிட்டது.
இதனால் இந்தப்படம் கைவிடப்பட்டதா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், ராமதாசின் பயோபிக்கை எடுத்தே தீர வேண்டும். அது தனது கடமை என்று சொல்லி இப்படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறார் பாமகவின் முன்னாள் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன். லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் தலைமைப்பொறுப்பில் உள்ள தமிழ்க்குமரன் தான் பெற்ற அனுபவத்தில் இப்படத்தை தயாரிக்க உள்ளார்.