ஏழு வார்த்தைகளில் பதிவிட்ட ராமதாசின் எக்ஸ் தள பதிவு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தேஜ கூட்டணியில் இருந்து விலகி தவெகவில் இணையப்போகிறது பாமக என்ற பேச்சினை எழுப்பி இருக்கிறது அந்த எக்ஸ் தள பதிவு.
ஒரு தேர்தலை கூட சந்திக்காக விஜய் எந்த அனுபவத்தில் குறை சொல்கிறார்? என்று விமர்சனம் எழும் அளவிற்கு தவெக தலைவர் விஜய் மாநாடு நடத்தி மத்திய, மாநில அரசுகளை வசை பாடி வருகிறார். தன்னுடன் கூட்டணி வைக்க முடியாத அளவிற்கு திராவிடமும் தமிழ்தேசியமும் இரு கண்கள் என்று தவெகவின் கொள்கையாக விஜய் அறிவித்ததால் ஆத்திரம் அடைந்த சீமான், விஷமும் விஷத்தை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாகும்? என்று கேட்கிறார்.
இரு கண்கள் என்று சொன்னதால், சாலையில் ஏதாவது ஒரு பக்கம் நிற்க வேண்டும். சாலை நடுவே நின்றால் லாரியில் அடிபட்டு சாகத்தான் வேண்டும் என்று கடுமையாக விஜய்யை வசைபாடி வருகிறார் சீமான்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் தனது கூட்டணிக்கணக்கை சொன்னதற்கு, பண்டிகைகால இலவச அறிவிப்பு போல அறிவிக்கிறார் விஜய் என்று விசிக திருமாவளவனும் கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்று பதிவிட்டுள்ளார்.
அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்றுதான் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜகவின் தேஜ கூட்டணியில் இணைந்தது பாமக. ஆனால், தேர்தலுக்கு பின்னர் பாமகவை கண்டுகொள்ளவே இல்லை பாஜக. ராமதாசுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ராமதாஸ், தவெக பக்கம் சென்றால் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அப்பக்கம் சென்றுவிட நினைக்கிறார் போலிருக்கிறது.
அதனால்தான் தவெக வருகைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அதே நேரம் தவெகவுக்கு தாவும் எண்ணத்திலும், பழையன கழிவதை தடுக்க முடியாது. புதியன வருவதையும் நிறுத்த முடியாது. இரண்டையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று பொருள்படும் நன்னூலில் உள்ள “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்று சொல்லி பரபரப்பு தீயை பற்றை வைத்துள்ளார் ராமதாஸ் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.