
மேடைதோறும் திருமாவளவனை அன்புமணி சீண்டுவதும் பதிலுக்கு அன்புமணியை திருமா சீண்டுவதும் தொடர்கிறது.
மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க இளைஞர் சித்திரை முழுநிலவும் மாநாட்டில் பேசிய அன்புமணி, மாநாட்டிற்கு வந்திருந்தவர்கள் எந்த பிரச்சனையும் செய்யாமல் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது, ’’மற்ற தலைவர்களைப் போல் நான் அத்துமீறு என்று சொல்ல மாட்டேன். நீ அமைதியாக இரு. எந்த பிரச்சனையும் செய்யாமல் வீடு போய் சேரு. என் தம்பியோ தங்கையோ ஒரு வழக்கு கூட வாங்கக்கூடாது’’ என்று சொன்னார்.
இதற்கு திருமா, சேலத்தில் நடந்த விசிக கூட்டத்தில் பேசியபோது பதிலடி கொடுத்தார். ’’அமைப்பாவதால் மட்டுமே அத்துமீற முடியும். அத்துமீறலால் மட்டுமே அடக்குமுறைகள் உடையும். இந்த அத்துமீறலுக்கு பொருள் என்னவென்று தெரியாமல் சிலபேர், ‘நான் அத்துமீறு என்றெல்லாம் சொல்லமாட்டேன். அதை செய் இதை செய் என்றெல்லாம் சொல்லமாட்டேன் என்று சொல்லி நம்மள கலாய்க்கிறாங்களாம்’’ என்று பதிலடி கொடுத்தார்.

வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய அன்புமணி குலப்பெருமை குறித்தும் பேசினார். வன்னிய இளைஞர் பெருமக்கள் பலருக்கும் தன் இன வரலாறு தெரியவில்லை என்று சொல்லி இன வரலாற்றை எடுத்துச் சொன்னார் அன்புமணி. ’’இந்தியாவிலேயே நம் குலத்திற்குத்தான் ஒரு புராணம் இருக்கிறது. நாம் வன்னியர் குல சத்தியர்கள். நாம் நெருப்பில் இருந்து பிறந்தவர்கள்’’ என்று சொன்னார்.
அன்புமணியின் இந்த பேச்சுக்கு திருச்சியில் நடந்த விசிக கூட்டத்தில் பேசியபோது பதிலடி கொடுத்திருக்கிறார் திருமா. ‘’இன்னைக்கு நீ நெருப்புல பிறந்தவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய். அப்படி ஒருவன் பிறக்க முடியாது. அது அறிவியலுக்கு முரணானது. இந்த உண்மையைச் சொல்றவன் தலித். அப்படி ஒரு வரலாறு இல்லை. அது முழுக்க முழுக்க கற்பனை. அது வரலாறு அல்ல. வரலாறாக இருந்திருந்தால் கல்விப்பாடத்தில் வந்திருக்கும். வரலாறு வேறு; புராணம் வேறு. புராணமும் வரலாறும் ஒன்றல்ல. முழுக்க முழுக்க கற்பனையானது புராணம்’’என்று அன்புமணிக்கு பாடம் எடுத்தார்.
வன்னியர் சங்க மாநாட்டில் ராமதாசும், அன்புமணியும் சாதி பெருமை பேசியதற்கும், அந்த மாநாட்டிற்கு 10 லட்சம் திரண்டு வந்திருந்தார்கள் என்றும் ராமதாஸ் பெருமையோடு சொல்லி வருவதற்கும் திருச்சி கூட்டத்தில் பேசிய திருமா பதிலடி கொடுத்திருக்கிறார்.

’’இது சாதிக்கட்சி கிடையாது; சாதி சங்கம் கிடையாது… கூச்சல் போட்டு போறதுக்கு. நிக்க முடியல.. கால் வலிக்குது; இடுப்பு வலிக்குது, முதுகு வலிக்குது, கண்ணுல கட்டி. தினமும் இரவு 1 நீங்க எல்லோரும் குறட்டை விட்டு தூங்குற நேரத்துலதான் நான் இரவு சாப்பாடு சாப்பிடுறேன். அதிகாலை 3 மணிக்குத்தான் தூங்குறேன். ஒரு நாளைக்கு 3 மணி நேரம்தான் தூங்குறேன்.
இதெல்லாம் எதுக்காக, எப்படியாவது உங்களை எல்லாம் ஒரு அமைப்பாக்கி விட வேண்டுங்கிறதுதான் எனது வேட்கை. நீங்கள் எல்லோரும் அரசியல் புரிந்தல் உள்ள ஒரு படையாக மாற வேண்டும் என்பதுதான் எனது வேட்கை’’ என்று சொன்ன திருமா,
’’10 லட்சம் பேர் வரணும் என்கிற அவசியமில்ல. 10 ஆயிரம் வந்தாலும் வரணும். ஏன் இந்த களத்துல நிற்குறோங்கிற புரிதல் உங்களுக்கு தேவை’’ என்று அழுத்திச் சொன்னார்.