தூக்க மாத்திரைகள் போட்டாலும் அன்புமணியால் தூக்கம் வரவில்லை. மன உளைச்சலில் இருக்கிறேன் என்று ராமதாஸ் தனது வேதனையை செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தி இருந்தார்.
நானும் எவ்வளவோ அவமானங்களை சந்தித்து வருகிறேன். எவ்வளவோ அசிங்கப்பட்டிருக்கிறேன். மன உளைச்சல்.. தூக்கம் இல்லாத நாட்கள் என்று தனது ஆதங்கத்தை ஆதரவாளர்கள் மத்தியில் வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், சேலத்தில் நடந்த பாமக செயற்குழு மேடையில் பேசிய ராமதாஸ், ‘’ஒரு கும்பல் என்னையும், கௌரவ தலைவரையும் தூற்றுகிறது. நான் வளர்த்த பிள்ளை மார்பில் ஈட்டியால் குத்துகிறார். சில்லறை பையன்களை வைத்து என்னை அவமானப்படுத்துகிறார்.
நான் வளர்த்த பிள்ளை, நான் பொறுப்பு கொடுத்த பிள்ளை இப்போது என்னை அவமதிக்கிறார். இதனால் எனக்கு பல நாட்கள் தூக்கம் வரவில்லை. சில நேரங்களில் இவனை நினைத்தால் தூக்க மாத்திரை போட்டால் கூட தூக்கம் வருவதில்லை. ஒருநாள் நீண்ட நேரம் கழித்து தூக்கம் வந்தது. அப்போது கனவில் என் அம்மா வந்தாங்க. அப்போது என்ன பிரச்சனை என்று கேட்டார். உன் பேரன்….’’ என்று சொல்லும் போது அதற்கு மேல் பேச முடியாமல் தேம்பித் தேம்பி அழுதார். அருகில் இருந்த மகள் காந்திமதி அவரை தேற்றினார்.

தொண்டர்கள் அனைவரும், ஐயா அழ வேண்டாம் ..அழ வேண்டாம் என்று ஆறுதல் சொன்னார்கள்.
அதன் பின்னர் பேசிய ராமதாஸ், ‘’ உன் மகன் தானே நீ வளர்த்த வளர்ப்பு அப்படி என்று சொன்னார் அம்மா. உண்மைதான். நான் என் மகனை சரியாக வளர்க்கவில்லை’’ என்று சொல்லிவிட்டு மீண்டும் கண் கலங்கினார்.
ஐயா.. ஐயா.. என்று தொண்டர்கள் ஆறுதல் சொன்னார்கள்.
