மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இதுவரைக்கும் 283 தொகுதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மூன்றாம் கட்டத்தேர்தலில் 65.68% வாக்குப்பதிவுகள் பதிவாகியுள்ளன என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மே-7 அன்று 11 மாநிலங்களில் நடந்த 3வது கட்ட தேர்தலில் 62.52% வாக்குகள் பதிவானதாக அப்போது தெரிவிக்கப்பட்ட நிலையில், 65.68% வாக்குகள் பதிவானதாக இன்று(11.5.2024) தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் தொடர்ந்து 3ம் கட்ட தேர்தலிலும் வாக்கு சதவீதத்தில் முரண்பாடு காட்டி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையில் நாளை மறுதினம் 10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் நடைபெறவிருக்கும் 4வது கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றிருக்கிறது.
ஆந்திராவில் 25 தொகுதிகளிலும், தெலுங்கானாவில் 17 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகளிலும், பீகாரில் 5 தொகுதிகளிலும், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகளிலும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளிலும், உ.பி.யில் 13 தொகுதியிலும், காஷ்மீரில் ஒரு தொகுதியிலும் ஒடிசாவில் 4 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதியிலும் என மொத்தம் 96 தொகுதிகளில் 13.5.2024ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 96 தொகுதிகளிலும் பிரச்சாரம் நடந்து முடிந்திருக்கிறது.
இதில், ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் ஒரே கட்டமாக 13.5.2024ல் நடைபெறுகிறது. அதே போன்று மக்களவை தேர்தலோடு சேர்த்து சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கிறது ஒடிசா. 21 மக்களவைத் தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. ஒடிசா மாநிலத்தில் நான்கு கட்டங்களாக சட்டமன்றத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், முதற்கட்டமாக நாளை 13.5.2024ல் 28 சட்டமன்ற தேர்தல் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் இவ்விரு மாநிலங்களிலும் அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து முடிந்திருக்கிறது.
‘’ஜூன் 4ம் தேதியுடன் பிஜேடி அரசு காலாவதி ஆகிறது. ஒடிசாவில் பிஜேபி முதன்முறையாக ஆட்சி அமையவிருக்கிறது. ஜூன் 10ம் தேதி அன்று பிஜேபி முதல்வரின் பதவியேற்பு விழா நடைபெறும்’’ என்று ஒடிசாவில் பெர்காம்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி நம்பிக்கையுடன் பேசி இருந்த நிலையில், 6வது முறையாக தான் மீண்டும் முதலமைச்சராக வர உள்ளதாகவும், ஜூன் 9ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் நவீன் பட்நாயக் சவால் விட்டுள்ளார்.
ஒடிசா அரசியல் களம் இப்படி தகிக்கிறது என்றால், ஆந்திர அரசியல் அதைவிட தகித்துக்கிடக்கிறது. ரோஜா உட்பட ஆந்திர தேர்தலில் நிறைய ஸ்டார் வேட்பாளர்கள் களம் இறங்கி இருக்கின்றனர்.
கடைசி நாளில் முக்கிய நட்சத்திரங்கள் களமிறங்கி அதகளம் செய்துள்ளனர். பவன் கல்யாணுக்கு ஆதரவாக பித்தாபுரம் பகுதியில் ராம் சரண், ஒய்.எஸ்.ஆர். கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அல்லு அர்ஜூன் நந்தியாலா பகுதியில் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். இருவரின் பிரச் சாரத்திலும் ரசிகர்கள் கடல் போல் திரண்டு வந்ததால் ஆந்திராவே ஆடிப்போயிருக்கிறது.
மக்களவைத்தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்கும் ஆந்திராவும், ஒடிசாவும் பதைபதைப்பில் இருக்கின்றன.