எல்லை மீறிய சமூக வலைத்தள விமர்சனங்களால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி பால்கனியில் இருந்து விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். தாயை இழந்து தவிக்கும் குழந்தையின் நிலையை எண்ணி, எல்லை மீறி விமர்சனம் செய்தவர்களை இன்று நெட்டிசன்கள் திட்டி தீர்க்கின்றனர். அவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஆவேசக்குரல் எழுப்பி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி அன்று சென்னை ஆடியை அடுத்த திருமுல்லைவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ரம்யா(33) தனது 7 மாத பெண் குழந்தைக்கு 4வது மாடியில் உள்ள பால்கனியில் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த குழந்தை துள்ளி தவறி விழுந்துவிட்டது.
அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை கீழே விழாமல் கூரையில் தொற்றிக்கொண்டிருந்தது. கொஞ்சம் பிடி நழுவினாலும் கீழே விழுந்து நிலையில் இருந்த அந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் பார்த்துவிட்டு பதறினர்.
உடனே பலரும் துரிதகதியில் செயல்பட்டு இன்னொரு வீட்டின் பால்கனி வழியாகச் சென்று அந்தக் குழந்தையை மீட்டனர். இந்த சம்பவத்தை எதிர்மாடியிலிருந்த சில வீடியோ எடுத்து அதை சமூக வளைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் தாய் ரம்யாவை திட்டித்தீர்தனர். பால்கனியில் இருந்து தவறி விழும் அளவிற்கு, அப்படி ஏன் கவனம் இல்லாமல் இருந்தார் என்று திட்டித்தீர்த்தனர்.
பிரபல யூடியூபர் பிரசாந்த் ரங்கசாமி itisprashanth, அந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ‘’அந்த குழந்தையை பெற்றவர்களுக்கு – உங்களுக்கு குழந்தை ஒரு கேடா?’’ என்று பதிவிட்டிருந்தார்.
அவரின் பதிவுக்கு கீழே பலரும், ‘’எத்தனையோ பேர் குழந்தை இல்லாம கஷ்டப்படுறாங்க. இவங்களுக்கு வந்து இந்த குழந்தை பிறந்திருக்கு. குழந்தைய ஒழுங்கா பார்த்துக்க முடியலன்னா ஏன் பெத்துக்கனும்? ஊர்ல குழந்தை இல்லாம கோவில் கோவிலா அலைஞ்சுட்டு இருக்காங்க. இவ்ளோ அசால்டா இருக்காங்க.
இந்த ஆடியோ கேட்கும் போது நமக்கே பதறுது. அதுவும் இறுதியில் அந்த குழந்தையை காப்பாத்தம்போது அந்த அக்கா பெருமூச்சு விடறாங்க. அவங்களுக்கு தான் தெரியும் குழந்தையோட அருமை.’’என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
அந்த குழந்தை விழுந்தது விபத்துதான். அப்பா, அம்மா மேல எந்த தவறும் இல்லை என்று குழந்தையை காப்பாற்றிய அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் விளக்கம் கொடுத்திருந்தனர்.
ஆனாலும், எக்ஸ் தளம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி பொதுமக்கள், நெட்டிசன்கள் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்ததால், ரம்யா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்திருக்கிறார்.
இதனால் ஒரு மாறுதலுக்காக 7 மாத பெண் குழந்தை மற்றும் 5 வயது ஆண் குழந்தையுடன் கோவை மாவட்டம் காரமடைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். 15 நாட்கள் தந்தை வீட்டில்தான் இருந்திருக்கிறார். கணவர் வெங்கடேஷுடன் ரம்யாவும் காரமடை வீட்டில் வொர்க் ப்ரம் ஹோம் முறையில் பணி செய்து வந்துள்ளனர்.
ரம்யா மன உளைச்சலில் இருந்ததால் அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங்க கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் தாயும் தந்தையும் திருமணத்திற்காக சென்றிருந்த நிலையில், குழந்தைகளுடன் கணவர் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் ரம்யா.
இரண்டு குழந்தைகளும் தாயை இழந்து தவிக்கின்றனர். இந்த நிலையைப்பார்த்து, பிரசாந்த் ரங்கசாமியைப்பார்த்து, அந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய இந்த நபர் கைது செய்யப்படுவாரா? என்று கேட்கிறார்கள் நெட்டிசன்கள்.
வீடியோவை வெளியிட்டு அந்த அம்மாவை அவமானப்படுத்தினர் . அதன் மூலம் அந்த தாயை தற்கொலைக்கு கொண்டு சென்றுவிட்டனர் என்று பாடகி சின்மயி கடும் தெரிவித்துள்ளார்.
பால்கனியில் ஒரு கையில் சாப்பாடு வைத்துக்கொண்டு ஒரு கையில் குழந்தையை பிடித்து இருந்ததால் ஊட்டும்போது குழந்தை துள்ளியதால் பாவம் தவற விட்டு விட்டார் . இது ஒரு விபத்து. இப்போ அந்த குழந்தை தாயில்லாத பிள்ளை. இப்போ எல்லாருக்கும் மகிழ்ச்சியா ?’’ஆவேசக்கேள்வி எழுப்பி வருகின்றனர்.