
gold loan
நெஞ்சு வலி என்று மருத்துவமனைக்கு அழைத்து வந்த கணவனுக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொன்னதும், பணமில்லையே என்று கலங்காமல், அந்தக் கணவன் தன் கழுத்தில் கட்டிய தாலிக்கொடியை உடனே கழற்றி, அடமானம் வைத்து அந்தப் பணத்தில் தன் கணவனையும் தாலியையும் மீட்கும் பெண்கள் இந்தியாவெங்கும் உண்டு. தங்க நகை என்பது பெண்களுக்கு அலங்காரமாக மட்டும் இருந்த காலம் மாறி, அது அவசர அவசியத்திற்கான சொத்தாக மாறிப் பல வருடங்களாகிறது.
பள்ளிக்கூடக் கட்டணம், இருசக்கர வாகனம் வாங்குவதற்கான முன்பணம் எனப் பல வழிகளிலும் தங்க நகைகள் கைக் கொடுத்து வருகின்றன. ஏழை-நடுத்தரக் குடும்பத்தினர் தங்கள் சுயமரியாதையை அடமானம் வைக்காதபடி, தங்க நகை அடமானக் கடன் அவர்களைக் காப்பாற்றி வருகிறது. இந்திய ஏழைகள் சுயமரியாதையோடு இருக்கலாமா? அதுவும், சனாதன-வருணாசிரமத்துக்காக வரிந்து கட்டும் கட்சியும் அதன் பிரதமரும் ஆளும் நாட்டில் ஏழைகள், சாதிரீதியாக ஒடுக்கப்படுபவர்கள் இவர்களெல்லாம் தங்க நகையை நம்பி சுயமரியாதையோடு வாழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், நகைக் கடனுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி.
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடியை விட வேகமாக சிந்தித்து மக்களை வதைப்பதில் முன்னணியில் நிற்பவர். வெங்காயம்-பூண்டு விலை உயர்வு பற்றிக் கேட்டால், அதையெல்லாம் நான் சாப்பிடுவதில்லை என்று பதில் சொன்ன பிரகஸ்பதி. தங்க நகைக் கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளால் ஏழை-நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்களே என்று கேட்டால், நான் நகையை அடமானம் வைப்பதில்லை என்று சொன்னாலும் சொல்வார்.
புதிய கட்டுப்பாடுகளின்படி, தங்க நகையை ஒருவர் ஏற்கனவே வங்கியில் அடமானம் வைத்திருந்தால், முழுப் பணத்தையும் கட்டிவிட்டு, மறுநாள்தான் மறு அடமானம் வைக்க முடியும். முன்பிருந்த விதியின்படி, அதுவரையிலான வட்டியைக் கட்டி மறு அடமானம் வைக்க முடியும் என்பதால் ஏழை-நடுத்தர மக்களுக்கு தங்க நகை என்பது ஒரு முதலீடாகக் கைக்கொடுத்து வந்தது. நகையில் உள்ள தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது 75 சதவீதமாக புதிய கட்டுப்பாட்டில் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், குறைந்த அளவிலான தேவைக்கும் கூடுதல் நகைகளை அடமானம் வைக்க வேண்டியிருக்கும்.
இனி அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிமை ஆதாரம் தரப்பட வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, தங்க நகை வாங்கியதற்கான பில் இருக்க வேண்டும். இந்தியக் குடும்பங்களின் மரபுவழி நகைகள் மூன்று நான்கு தலைமுறைகளுக்கு மேல் சீராக வழங்கப்படுகின்றன. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் மொய்யாக தங்கத்தாலான அணிகலன்களையும் பொருட்களையும் தருபவர்களும் உண்டு. இவற்றுக்கெல்லாம் எங்கிருந்து பில் வாங்க முடியும்? பரம்பரையாக அணிந்து கொள்ளும் நகை என்பதாலேயே அதனை விற்காமலும், மாற்று நகையாக செய்யாமலும், அப்படியே அடமானம் வைத்து, பணம் கிடைத்ததும் மீட்பது என்பது ஏழை-நடுத்தர குடும்பத்தினரின் வழக்கம். இனி, அவர்கள் அப்படி அடமானம் வைக்க முடியாது. ஏழையின் நகையும் கண்ணீர் வடிக்கும் நிலைக்குள்ளாகி விட்டது.
பழைய நகை-பாரம்பரிய நகையாக இருந்தால் அதனை உருக்க வேண்டும். அதன்பிறகு புதிய நகை செய்ய வேண்டும். அதற்கான செய்கூலி-சேதாரம் செலவை ஏற்கவேண்டும். இந்தக் கூடுதல் செலவுடன், பழைய நகை தற்போது புதிய டிசைன் நகையாகிவிட்டதால் அதற்கு ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும். இத்தனையும் செய்து, பில்லுடன் சென்றால்தான் வங்கிகளில் அடமானம் வைக்க முடியும்.
கருப்புப் பணத்தை ஒழிப்பதாகச் சொல்லி 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்த அதிமேதாவிகள், தங்கத்தின் புழக்கத்தை கணக்கிற்கு கொண்டு வருவதாக நினைத்து, அப்போது போலவே இப்போதும் ஏழை-நடுத்தர மக்களை மனசாட்சியே இல்லாமல் துன்புறுத்தும் செயலை மேற்கொண்டிருக்கிறார்கள். தனியார் மருத்துவக் கல்லூரியின் கட்டணக் கொள்ளையை ஒழிக்கவே நீட் தேர்வை அறிமுகப்படுத்துகிறோம் என்று சொல்லி கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிப்பதற்கு வழி வகுத்தது மத்திய அரசு. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நடுத்தர குடும்பத்து மாணவமணிகள்தான். கொழுத்த லாபம் அடைந்த கோச்சிங் சென்டர்கள் பலவும் மத்திய பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களுடையதாக இருந்தது.
வங்கிகளில் நகை அடமானம் வைக்க ரிசர்வ் வங்கி வாயிலாக விதிக்கப்பட்டிருக்கும் புதிய கெடுபிடிகளால், ஏழை-நடுத்தர மக்கள் தங்கள் அவசர பணத் தேவைக்கு வட்டிக்கடைக்காரர்களிடம் செல்வார்கள். அவர்கள் பெரும்பாலும் குஜராத்தைச் சேர்ந்த மார்வாடிகளாக இருப்பார்கள். கூட்டிக் கழிச்சிப் பாருங்க. வட்டியோடு கணக்கு சரியா இருக்கும்.