
இந்திய ரிசர்வ் வங்கி 2025-26ம் நிதியாண்டுக்கான நிதி கொள்கை கூட்டம் இன்றைய தினம் மும்பையில் நடைபெற்றது. இதில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் மைய வங்கி அந்நாட்டில் இருக்கும் வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதம் எனப்படுகிறது.
அப்படி இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் உள்ள மற்ற வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு 6.25% வட்டியை விதித்து வந்தது. அதனை தற்போது 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தில் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் குறைந்து பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதால் ரெப்போ விகிதத்தைக் குறைப்பதாக சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நிதி கொள்கை ஆணையம் முடிவெடுத்துள்ளது.
பணவீக்கமும் – ரெப்போ வட்டி விகிதமும்:
ரெப்போ வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வணிக வங்கிகள் கடன் வாங்கும் அளவு குறையும். இதனால் வங்கிகளிடம் இருக்கும் பணத்தின் அளவு குறையும். பொது மக்களின் கைகளுக்குப் பணத்தைக் கொண்டு சேர்க்கும் வங்கிகளில் பணம் குறைவதால், செலவு செய்வதற்கான அதிகப் பணமும் மக்களிடம் இருக்காது. இதனால், மக்கள் எந்த ஒரு பொருளையும் அதிகம் செலவு செய்து வாங்க முன்வர மாட்டார்கள்.

மேலும், ரிசர்வ் வங்கிக்கு வணிக வங்கி அதிக வட்டி கொடுக்க வேண்டி இருப்பதால் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்த வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டியை உயர்த்தும். இதனைத் தொடர்ந்து விலைகள் குறைந்து பணவீக்கம் கட்டுப்படும் என்பது தான் ரெப்போ வட்டி விகித கோட்பாடு.
பயனாளிகள் யார்?
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது குறைக்கப்பட்டு வருகிறது. இதனால், ஏற்கனவே வங்கிகளில் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் பெற்று தவணை செலுத்தி வருபவர்களின் மாதத் தவணை தொகை குறையும்.
பணவீக்கம் தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பேசுகையில், ”உணவுப் பொருட்களின் விலை எதிர் பார்த்ததை விடக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் சர்வதேச சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்றவை பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.