
Statue Of Karl Marx To Be Installed In Chennai, Says CM MK Stalin
“இழப்பதற்கு எதுவுமில்லை, அடைவதற்கு ஒரு பொன்னுலகம் இருக்கிறது” என்றவர் கார்ல் மார்க்ஸ். அவருக்குத் தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை சட்டமன்றத்தில் காலையில் வெளியிட்ட முதலமைச்சர், மாலையில் மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றார். அரை நூற்றாண்டுக்கு முன்பு கம்யூனிசம் ஏறத்தாழ பாதி உலகை ஆண்டது. இந்தியாவிலும் பல மாநிலங்களில் வலிமையோடும், சில மாநிலங்களில் ஆட்சியிலும் இருந்தது. தற்போது இந்தியாவில் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி ஆட்சி செய்யும் ஒரே மாநிலம், கேரளா.
அரசியல்ரீதியாக இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற சூழல் இருந்தாலும், இந்திய மக்கள் அடையவேண்டியவை குறித்து ஆழ்ந்து சிந்திப்பதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு முதன்மையான இடம் உண்டு. காங்கிரஸ் கட்சி அரசியல்ரீதியாக பா.ஜ.க.வுக்கு எதிரி என்றாலும், பா.ஜ.க.வுக்கு சித்தாந்த ரீதியான நேரடி எதிரி கம்யூனிஸ்ட் கட்சியினர்தான். ஒன்றாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி காலப்போக்கில் அரசியல் களத்தில் இரண்டாகப் பிரிந்து, பின்னர் பல பிளவுகளைக் கண்டிருந்தாலும், இருப்பதில் வலிமையானவையாக சி.பி.எம் எனப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அடுத்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் உள்ளன. ஜனசங்கம் என்ற அமைப்பு உருமாற்றம் பெற்று, பாரதிய ஜனதா கட்சியாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் உருவாக்கப்பட்டபோதிலிருந்தே அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள்.
பா.ஜ.க.விற்கு ஆதரவாக டி.வி. விவாதங்களில் பேசுகிறவர்களை வலதுசாரிகள் என்று குறிப்பிடுவதைக் காணலாம். பழமைவாத கருத்துகளைக் கொண்டவர்கள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வலது புறமாகவும், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் இடதுபுறமாகவும் உட்கார வைக்கப்பட்டதால், கம்யூனிஸ்ட்டுகள் இடதுசாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். பழமைவாதம் என்பது தங்களுக்கான மதம், புராணம், நம்பிக்கை இவற்றை மட்டுமே வாழ்வியலாகக் கொண்டு, மாற்றுக்கருத்து கொண்டவர்கள் மீது வெறுப்பைக் கக்குவதாகும். முற்போக்கு என்பது கல்வி, அறிவியல், காலத்திற்கேற்ற மாற்றங்களை உணர்ந்து அனுமதித்து மனிதர்கள் அனைவருக்குமான உரிமையை நிலைநாட்டுவதாகும். அனைவருக்குமான உரிமையின் அடுத்த வளர்ச்சிக் கட்டம் பொதுவுடைமை நிலையாகும். அதனால்தான், கம்யூனிஸ்ட்டுகள் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அவர்களின் கொள்கை முடிவுகள் தோழமை சக்திகளாலும் எதிர்ப்பு சக்திகளாலும் தொடர்ந்து கவனிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், தொண்டர்கள் எந்தளவு இருக்கிறார்கள் என்பதைவிட, கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைத் தாக்கம் எந்தளவு இருக்கிறது என்பதுதான் முக்கியமானது. தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் எனப் பெயர் பெற்ற சிங்காரவேலர், நூறு ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் மே தின விழாவைக் கொண்டாடி, தொழிலாளர்களின் உரிமையை நிலைநிறுத்தியவர். அந்நாளில் காங்கிரஸ் கட்சி தொடங்கி பல அமைப்புகளிலும் கம்யூனிஸ்ட்டுகளை மதித்தார்கள். அவர்களின் எளிமையும் தியாகமும்தான் அதற்கு காரணம். திராவிட இயக்கம் என்பது கம்யூனிசக் கொள்கைகளின் சாரத்தை, சமூக நீதி என்ற தத்துவத்தின் வழியாக முன்னெடுக்கும் இயக்கம்.
கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்ற சோவியத் யூனியனுக்கு சென்று வந்த பெரியார், பொதுவுடைமைப் பரப்புரையை மேற்கொண்டார். மாஸ்கோ, ரஷ்யா என்று பொதுவுடைமை நாடு, நகரங்களின் பெயர்களைக் குழந்தைகளுக்கு வைத்தார். தி.மு.க.வை தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி என்றார் அண்ணா. கட்சிக்கொடியின் மேலே கருப்பும், கீழே சிவப்பும் வைத்து, கருப்பு எனும் சமுதாய-அரசியல்-பொருளாதார இருட்டை விலக்குவதற்கு அடிவானத்து சூரியன் போல சிவப்பு மேலே எழுந்த வரும் என்று அதற்கு விளக்கமும் தந்தார்.
பெரியாரையும் அண்ணாவையும் சந்தித்திருக்காவிட்டால் நான் கம்யூனிஸ்டடாக இருந்திருப்பேன் என்றவர் கலைஞர் கருணாநிதி. அவர் தன் மகனுக்கு வைத்த பெயர், ஸ்டாலின். அந்த ஸ்டாலின்தான் இன்றைய கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தோழமைக்குரிய தலைவராக இருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியை நேரு அரசாங்கம் தடை செய்திருந்த காலத்தில், தமிழ்நாட்டில் தேடப்பட்ட கம்யூனிஸ்ட்டுகளுக்கு பாதுகாப்பளித்ததில் திராவிட இயக்கத்தவர்களுக்கு பங்கு உண்டு. ராஜாஜி ஆட்சியில் சேலம் சிறையில் 20க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டபோது, வெளியே வராமல் மறைக்கப்பட்ட அந்த கொடூர செய்தியை ஊர்தோறும் மேடைபோட்டு மக்களிடம் எடுத்துச் சொன்னவர்கள் தி.க.வினரும், தி.மு.க.வினரும்தான்.
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் செயல்படுத்தப்படும் சமூக நீதித் திட்டங்கள், தொழிலாளர் நலச் சட்டங்கள், விவசாயிகள் பாதுகாப்புக்கான செயல்பாடுகள் இவற்றில் கம்யூனிசத்தின் தாக்கம் உண்டு. தேர்தல் அரசியல் களத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மேற்கொண்ட பல நிலைப்பாடுகள் அவர்களின் வலிமையைக் குறைத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து, உலகளவில் ஹிட்லார் கால பாசிசத்தை முறியடித்த வரலாறு ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்டாலினுக்கு உண்டு. இந்தியாவின் காவி பாசிசத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட்டுகள் மாநாட்டில் ஒருங்கிணைந்து நின்றிருக்கிறார் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
oknon0
zq3011