தொலைக்காட்சி விநியோகம் மற்றும் ஜியோ சினிமாவை வலுப்படுத்தும் நோக்கில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், Disney நிறுவனத்திடம் இருந்து 29.8% TATA Play பங்குகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது.
சந்தா அடிப்படையில் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளை வழங்கி வரும் TATA Play நிறுவனத்தில், Walt Disney நிறுவனம் வைத்திருக்கும் 29.8% பங்குகளை வாங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஆலோசனை செய்து வருவதாக, Business Standard நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் தொலைக்காட்சி விநியோகத் துறையில் தனது இருப்பை வலுப்படுத்தவும், அதன் OTT தளமான JioCinema-வை விரிவுபடுத்தும் நோக்கில் சாத்தியமான ஒப்பந்தத்தை எட்ட ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
TATA குழுமத்தின் TATA Sons நிறுவனம், தற்போது TATA Play-வில் பெரும்பான்மையான 50.2% பங்குகளை வைத்துள்ளது. மீதமுள்ள பங்குகள் சிங்கப்பூரைச் சேர்ந்த Temasek நிறுவனம் கொண்டுள்ளது.
Reliance மற்றும் TATA Play இடையேயான பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால், இது TATA குழுமத்திற்கும் முகேஷ் அம்பானிக்கும் இடையிலான முதல் தொழில் ஒத்துழைப்பாக அமையும்.
கூடுதலாக, இது Reliance OTT ஸ்ட்ரீமிங் தளமான JioCinema-வின் இருப்பை Tata Play வாடிக்கையாளர்களுக்கு விரிவுபடுத்தவும் வழிவகுக்கும்.
இந்த சூழலில், TATA Play-வில் உள்ள Disney நிறுவனத்தின் பங்குகளின் மதிப்புகள் தற்போது கணக்கெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முன்னணி தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பு விநியோகஸ்தராக Tata Play இருந்து வந்தாலும், Netflix, Hotstar, Jio Cinema மற்றும் Amazon Prime போன்ற OTT தளங்களில் இருந்து சவால்களை எதிர்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.