வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுவடைந்து புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப்புயலுக்கு ஓமன் நாடு முன்னதாகவே பரிந்துரைத்த ரெமல் ( மணல்) பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப்புயல் வரும் 25ம் தேதி அன்று காலையில் வலுப்பெற்று 26ம் தேதி மாலையில் வங்க தேசத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தரவனக்காடுகள் பகுதிகளில் இந்த புயல் கரையை கடப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒடிசா அல்லது மேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் இந்தப்புயல் என்று கூறப்பட்டு வந்த நிலையில், வங்க தேசத்தில் கரையை கடக்கும் என்றும், 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் இந்தப்புயல் கரையைக் கடக்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்புயலின் தாக்கத்தால் வட கிழக்கு மாநிலங்களில் கன மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வங்க கடலோர மாநிலங்களில் கன மழை பெய்யக்கூடும். இன்று காலை முதற்கொண்டே மேற்கு வங்கத்தில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் நாளை மறுதினம் 8 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் புயல் கரையை கடக்கிறது. இதனால் மேற்கு வங்கத்தில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த புயல் தமிழ்நாட்டை விட்டு விலகிச்செல்வதால் தமிழ்நாட்டில் மழை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறது வானிலை ஆய்வு மையம். அதே நேரம், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பெய்யும் மழையானது படிப்படியாக குறையும் என்றும், மேற்கு தொடர்ச்சியை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், புயலினால் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடைந்து தமிழ்நாட்டில் சற்று முன்னதாகவே தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரெமல் புயல் கரையை கடந்த பின்னர் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.