
உலகெங்கும் வாழும் 1.4 பில்லியன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் திருச்சபைத் தலைவரான போப் பிரான்சிஸ் வாடிகனில் இயற்கை எய்தியதற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருப்பதுடன், பலர் அவருடைய இறுதிச் சடங்கில் நேரடியாகவும் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் சார்பில் அமைச்சர் ஆவடி நாசரும், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜூம் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவத்தின் பழமையான நெறிமுறைகளைப் பின்பற்றுபவர்கள் கத்தோலிக்கர்களாகவும், அதில் மாற்றங்களை வலியுறுத்துபவர்கள் பல்வேறு பிரிவுகளைக் கொண்ட புரட்டஸ்டான்டுகளாகவும் கருதப்படுகிறார்கள். எனினும், போப் என்ற உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்தான் உலக நாடுகளின் மதிப்பைப் பெற்ற கிறிஸ்தவ மதகுருவாகத் திகழ்கிறார். 2013ஆண்டு போப்பாக இருந்த பெனடிக்ட் தன் உடல் நலன் காரணமாக அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். 600 ஆண்டுகால மரபில் உடல்நலமின்றி ஒருவர் பதவி விலகியது அதுவே முதல் முறை. அவரைத் தொடர்ந்து அந்தப் பொறுப்புக்கு வந்தவர்தான் போப் பிரான்சிஸ்.
தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸில் பிறந்த இவருடைய இயற்பெயர் ஜோர்கே மரியோ பெர்கோக்லியோ என்பதாகும். இவருடைய பெற்றோர் இத்தாலி நாட்டிலிருந்து அர்ஜென்டினாவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள். சிறுவயதில் ஏற்பட்ட காதல் தோல்வி, பின்னர் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து மதபோதனைகளில் ஆர்வம் செலுத்தி, பியூனஸ் அயர்ஸ் ஆர்ச்பிஷப் ஆனார். 2013 மே 13 முதல் போப்பாகத் தேர்வு செய்ப்பட்டு அந்தப் பொறுப்பில் இருந்து வந்தார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியிலிருந்து ஒருவரை போப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அது போப் பிரான்சிஸ்தான். அதுவும் அமெரிக்க கண்டத்திலிருந்து ஒருவர் போப் ஆனபோது அவர் மிகவும் கவனிக்கப்பட்டார். மறைநூலுக்கு மாற்றாக உள்ள கருத்துகளை கத்தோலிக்கத் திருச்சபை அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ளாத காலம் ஒன்று இருந்தது. உலகம் தட்டையானது என்ற நம்பிக்கைக்கு மாற்றாக, உலகம் உருண்டையானது என்று சொன்னவருக்கு வழங்கப்பட்ட தண்டனை உள்ளிட்ட பல நிகழ்வுகள் வரலாற்றில் உள்ளன. அந்தக் காலங்களைக் கடந்து, உலகம் இன்றுள்ள நிலையை உணர்ந்து, திருச்சபைகளில் மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், போப் பிரான்சிஸ் காலநிலை மாற்றம், சூழலியல் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தியதுடன் அது குறித்த பிரகடனத்தையும் வெளியிட்டார். ஓரினச் சேர்க்கையாளர்கள், ஒற்றைப் பெற்றோர், மணவிலக்கு பெற்றவர்கள் குறித்த பழைய பார்வைகளிலிருந்து மாறுபட்டு, முற்போக்கான சில நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார்.
ரோமன் கத்தோலிக்கத் தலைவர்களுக்கும் ருஷ்ய பழமைவாத தேவாலயத்தினருக்குமான கூட்டங்களை நடத்திய முதல் போப், பிரான்சிஸ்தான். சீனா போன்ற நாடுகளுடன் பிஷப் நியமனம் தொடர்பான ஒப்பந்தங்களையும் உருவாக்கினார். அபுதாபிக்கு பயணம் செய்த முதல் போப் என்ற பெருமையுடன் சன்னி முஸ்லிம் சமுதாயத்தின் உயர் பொறுப்பில் இருப்பவருடன் சகோதரத்துவத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதுபோலவே ஈராக்கிற்கு சென்று ஷியா முல்லிம் தலைவர்களையும் சந்தித்தார்.
கத்தோலிக்க திருச்சபைகளிலும் அவை சார்ந்த இடங்களிலும் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்கள்-தாக்குதல்களைத் தடுப்பதற்கான முன்னெடுப்புகளை அவர் மேற்கொண்டது கத்தோலிரக்க திருச்சபை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். பிஷப் சபைகளில் பெண்கள் வாக்களிக்கும் உரிமை, புனிதம் மிகுந்ததாகக் கருதப்படம் வாடிகன் மத ஒழுங்கு மேற்பார்வைத் துறையின் தலைவராக அருட்சகோதரி ஒருவரை நியமனம் செய்தது, ஓரின இணையர்களுக்கு மதபோதகர்கள் ஆசி வழங்குவதற்கு அனுமதி என போப் பிரான்சிஸ் ஏற்படுத்திய மாற்றங்கள், காலத்திற்கேற்ப மதங்களில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதை அனைத்து மதங்களுக்கும் வலியுறுத்தக்கூடியதாக உள்ளது.
ஒவ்வொரு மதத்திலும் சீர்திருத்தவாதிகள் உருவாகிறார்கள். வள்ளலார், நாராயணகுரு போன்றவர்களை நாம் அறிவோம். உலகின் பல நாடுகளிலும் அத்தகைய சீர்திருத்தவாதிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கும்போது, பழமைவாத மதத்தலைவர்கள் அவர்களை எதிர்ப்பதும், இழிவுபடுத்துவதும், தாக்குவதுமாக இருந்ததை வரலாற்றின் பக்கங்களில் காண முடியும். இப்போதும் கூட அத்தகைய மதவெறியர்களை நம் நாட்டின் அரசியல் களம் வரை காண முடிகிறது. இத்தகைய சூழலில், பழமைவாத நெறிகளைப் பின்பற்றும் கத்தோலிக்க மதத்தின் தலைவரான போப் பிரான்சிஸ் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது வரவேற்பிற்குரியது.
88 வயதில் உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சைக்குட்பட்டு டிஸ்சார்ஜாகி, ஈஸ்டர் நாளில் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த கிறிஸ்தவர்களுக்கு ஆசி வழங்கிவிட்டு மறுநாள் (ஏப்ரல் 21) அன்று மரணமடைந்திருக்கிறார் போப் பிரான்சிஸ். அவருடைய பொறுப்புக்கு அடுத்தடுத்த வருபவர்களும் மாற்றங்களை உருவாக்கி, மதங்களில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தட்டும்.