மரியாதை என்பது ஒரு வழிப்பாதை அல்ல. மரியாதை வேண்டுமென்றால் மரியாதை கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆவேசப்பட்டுள்ளார் நடிகை குஷ்பு.
விஜய் சேதுபதி – த்ரிஷா நடித்த ‘96’ படத்தில் பள்ளிப்பருவ த்ரிஷா வேடத்தில் நடித்தவர் கவுரி கிஷன். இவர் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவனுடன் ‘அதர்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, யூடியூப்பர் ஒருவர், ‘’பாடல் காட்சியில் கவுரி கிஷனை தூக்கி இருக்கிறீர்களே… அவரின் உடல் எடை எவ்வளவு?’’ என்று கேட்க, ஆத்திரமடைந்த கவுரி கிஷன், ‘’இது ஸ்டுப்பிட் கேள்வி. என்னை உருவ கேலி செய்வதில் எனக்கு விருப்பமில்லை’’ என்று ஆவேசப்பட்டார்.

இதில் ஆத்திரப்பட்ட அந்த யூடியூப்பர் சத்தம் போட, பதிலுக்கு கவுரி கிஷன் சத்தம் போட, அவரை சத்தம் போட விடாதபடி அந்த யூடியூப்பர் சத்தம் போட்டுக்கொண்டே இருக்க, அங்கிருந்த ஆண்கள் அனைவரும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, கவுரி கிஷன் கண் கலங்கினார்.
உடனே கவுரி கிஷன், ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு இப்படி தரமற்ற செயலை செய்கிறீர்கள். அதை இங்கே இருக்கும் யாரும் தட்டிக்கேட்கவில்லை என்று ஆதங்கப்பட்டார்.
தனக்கு கேள்வி கேட்கத் தெரியவில்லை என்று சொன்னதற்கு கவுரி கிஷனை மன்னிப்பு கேட்கச்சொன்னார் யூடியூப்பர். அதற்கு முடியாது. நீங்கள்தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் சொல்லிவிட்டார் கவுரி கிஷன்.

இந்த விவகாரத்தில் கவுரி கிஷனுக்கு ஆதரவு வலுத்து வருகிறது. தன்னம்பிக்கையுடன் தன் நிலைப்பாட்டை எடுத்து வைத்து உறுதியுடன் எதிர்த்த கவுரி கிஷனை பாராட்டி இருக்கிறார் பாடகி சின்மயி.
நடிகை குஷ்பு, ‘’பத்திரிகைத்துறை தனது தரத்தை இழந்துவிட்டது. பத்திரிகையாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பத்திரிகை துறையை சாக்கடைக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
ஒரு பெண்ணின் எடை எவ்வளவு? என்று கேட்பது செய்தியாளர்களின் வேலை இல்லை. அதைப் பற்றி ஹீரோவிடம் கேட்பது? அவமானம்!

நிலைப்பாட்டில் நின்று அதற்குப் பதிலடி கொடுத்த கௌரி கிஷனுக்கு பாராட்டுகள். அதே ஆண்களிடம், தங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களைப் பற்றி அதே கேள்வியைக் கேட்டால் சரியா இருக்குமா? மரியாதை ஒருபோதும் ஒருவழிப் போக்குவரத்து அல்ல. மதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் முதலில் மரியாதை கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்’’ என்று அவேசத்துடன் பதிவிட்டிருக்கிறார்.
