தமிழ்நாடு மாநிலத்தின் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. கடந்த 2023 ஆண்டைக்காட்டிலும் நடப்பாண்டின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வழக்கம் போலவே மாணவிகளின் தேர்ச்சி விகிதமே முன்னணியில் உள்ளது. சிறைவாசிகளின் முயற்சியும் வியக்க வைக்கிறது. தேர்வெழுதிய 125 சிறைவாசிகளில் 115 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் 1.3.2024 முதல் 22.3.2024 வரை நடைபெற்றன. மாநிலம் முழுவதிலும் 4,08,440 மாணவிகளும், 3,52,165 மானவர்களும், மூன்றாம் பாலினத்தவர் -1 என மொத்தம் 7,60,606 மாணாக்கர்கள் தேர்வெழுதினர். இதில், 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 3,93, 890 பேரும் மாணவர்கள் 3,25,305 பேரும், மூன்றாம் பாலினத்தவர் -1ம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டில் 8,03,385 மாணாக்கர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 94.03% என்று இருந்த நிலையில், நடப்பாண்டின் தேர்ச்சி விகிதம் 94.56% ஆக அதிகரித்துள்ளது.
2024ஆம் ஆண்டின் மொத்த தேர்ச்சி விகிதம் 94.56% என்கிற நிலையில், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.44% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.37% ஆகவும் உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் தேர்ச்சி விகிதம் 100% ஆக உள்ளது. மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 4.07% அதிகரித்துள்ளது.
5603 மாற்றத்திறனாளி மாணாக்கர்கள் தேர்வெழுதி இருந்த நிலையில், 5161 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 125 சிறைவாசிகள் தேர்வெழுதி இருந்த நிலையில், அதில் 115 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
100% மதிப்பெண் பெற்ற பாடப்பிரிவில் அதிகம் பேர் இடம்பெற்றிருப்பது கணினி அறிவியல் பாடப்பிரிவுதான். இந்தப்பிரிவுதான் அதிக கவனம் பெற்றிருக்கிறது. இப்பாடப்பிரிவில் 6996 பேர் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக வணிகவியலில் 6141 பேர் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். மூன்றாம் இடமாக பொருளியல் பாடப்பிரிவில் 3299 பேர் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 2587 பேரும், கணினிப் பயன்பாடுகளில் பிரிவில் 2251 பேரும், கணக்குப் படிவியலில் 1647 பேரும், இயற்பியலில் 633 பேரும், வேதியியலில் 471 பேரும், விலங்கியலில் 382 பேரும், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியலில் 210 பேரும், தாவரவியலில் 90 பேரும், தமிழில் 35 பேரும் கடைசியாக ஆங்கிலத்தில் 7 பேரும் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.02% ஆகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 95.49% ஆகவும், தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.70% ஆகவும், இருபாலர் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 94.78% ஆகவும், பெண்கள் பள்ளிகளில் 96.39% ஆகவும், ஆண்கள் பள்ளிகளில் 88.98% ஆகவும் உள்ளது.
தேர்ச்சி விகிதத்தில் 97.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 90.47% பெற்று திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. 97.42% பெற்று ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் 2ம் இடம் பிடித்துள்ளன. 97.25% பெற்று அரியலூர் மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ’’பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்!’’ என்று வாழ்த்தி இருக்கிறார்.
அதே நேரம், ‘’இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்!’’ என்று நம்பிக்கையும் அளித்திருக்கிறார்.