லாஸ் ஏஞ்சலஸில் பிரபல ஹாலிவுட் இயக்குநரும் (Hollywood-director) தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல அமெரிக்க திரைப்பட இயக்குநர் :
1947 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி நியூயார்க் நகரில் பிறந்த ராப் ரெய்னர் (Rob Reiner) ஒரு புகழ்பெற்ற அமெரிக்க திரைப்பட இயக்குநர் ஆவார். மேலும் இவர் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார். மேலும், இவரது தந்தை கார்ல் ரெய்னர் (Carl Reiner) ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

அவரது இயக்கத்தில் வெளிவந்த சில முக்கிய திரைப்படங்கள்:
- திஸ் இஸ் ஸ்பைனல் டேப் (This Is Spinal Tap)
- ஸ்டாண்ட் பை மீ (Stand by Me)
- தி பிரின்சஸ் பிரைட் (The Princess Bride)
- வென் ஹாரி மெட் சாலி (When Harry Met Sally)
- மிஸரி (Misery)
- எ ஃபியூ குட் மென் (A Few Good Men)
- தி பக்கெட் லிஸ்ட் (The Bucket List)
திருமண வாழ்க்கை :
இவர் முதலில் நடிகையும் இயக்குநருமான பென்னி மார்ஷல் (Penny Marshall) என்பவரை 1971 இல் திருமணம் செய்துள்ளார். இதன் பின்னர் 1981இல் விவாகரத்து செய்தார். இதனையடுத்து, 1989ஆம் ஆண்டில் புகைப்படக் கலைஞர் மிஷெல் சிங்கர் (Michele Singer Reiner) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

மர்மமான முறையில் கத்தியால் குத்திக்கொலை :
இதனையடுத்து, லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பிரென்ட்வுட் வீட்டில் 78 வயது மற்றும் 68 வயதுடைய தம்பதி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து, உயிரிழந்த நபர்கள் குறித்து ஆரம்பத்தில் விபரம் வெளியாகாத நிலையில், பின்னர் அது ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி மிக்கேல் என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், இருவரது உடலிலும் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஹாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
