அரசியலுக்கும் முன்னோடி அயர்லாந்து அறிஞர் இராபர்ட் கால்டுவெல். 7.5.1814ல் அயர்லாந்தில் பிறந்தவர்.
கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப தமிழ்நாடு வந்த கால்டுவெல் தமிழ் காதலராக மாறினார். ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டு 18 மொழிகளை நன்கு கற்று தேர்ந்த இராபர்ட் கால்டுவெல் தமிழர்களின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு உணர்வால் தமிழ்மொழி குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். ஆராய்ச்சியின் விளைவாய் ஒப்பிலக்கணம் வெளியிட்டார். இது தமிழ் வரலாற்றில் மிக முக்கிய திருப்புமுனை நூல் ஆகும்.
சென்னையில் 3 ஆண்டுகள் தங்கியிருந்த காலத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கம், பண்பாடு, தமிழ்மொழி சிறப்பு போன்றவற்றை கண்டும் ,கேட்டும் அறிந்து வியந்துள்ளார். இதன் பின்னர் அவர் தமிழ்மொழி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆராய்சியின் போது அவர் சென்னையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி வரை நடந்தே சென்று மக்களைச் சந்தித்து சென்றுள்ளார். இதனால் அவர் பல இன்னல்களை சந்தித்துள்ளார்.
வழியெங்கும் வட்டார வழக்கு, மக்களின் வாழ்க்கை, தொழில், பொருளாதாரம், சடங்குகள், நம்பிக்கைகள், மத வழிபாடுகள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்கிறார். திருவெல்வேலியில் இடையன்குடி இடத்தை அடைந்து அங்கே 50 ஆண்டுகாலம் வசிக்கிறார். அப்போது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உண்டு உறைவிட பள்ளி, பெண்களுக்கான தனி கல்வி நிறுவனங்களையும் நடத்தினார். சமயப்பணி, தமிழ்ப்பணி, ஒடுக்கப்பட்டோரை மேம்படுத்தும் பணி என்று மூன்றிலும் அவர் கவனம் கொண்டார். திராவிடம் என்ற கருத்தியலை ஏற்காதவர்கள் கால்டுவெல் மீது எதிர் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.
சமஸ்கிருதம்தான் தொன்மையான மொழி என்று பேசப்பட்டு வந்த காலகட்டத்தில் தமிழ்மொழியை இழித்தும் பழித்தும் வந்த காலகட்டத்தில் சமஸ்கிருதம் இல்லாமல் தமிழால் இயங்க முடியும், தமிழ்மொழிதான் தொன்மையான மொழி, தனித்த சிறப்பு வாய்ந்த மொழி என்று ஆய்வுப்பூர்வமாக நிரூபித்தவர் கால்டுவெல். நாகர்கோவிலில் பணியாற்றிய சமயப்பணியாளரின் மகள் எலிசாவை திருமணம் செய்துகொண்டார் கால்டுவெல். தமிழ்மொழியில் ஆழ்ந்த புலமை கொண்ட எலிசா, கால்டுவெல் தமிழ் நன்கு கற்பதற்கு உதவியாக இருந்தார். இருவரும் இணைந்து தமிழ் தொண்டாற்றினர்.
திராவிடம் என்ற கருத்தியலை முன்வைத்தார் என்பதற்காக அந்த கருத்தியலை எதிர்கொள்ள முடியாமல் ஆர்.என். ரவி போன்றோர் எதிர்க்கும்போது இன்றைய இளைஞர்கள் கால்டுவெல் பற்றி அறிந்துகொள்ள ஆவல் கொள்கிறார்கள். இது குறித்து பேராசிரியர் ஜேம்ஸ் ஆர்.டேனியல், ’’இன்று இருக்கின்ற அரசியல், பண்பாட்டு, இலக்கண, இலக்கிய, மொழியியல், மெய்யியல் பின்புலத்தில் கால்டுவெல்லை நாம் எங்கே கொண்டு செல்ல வேண்டும்?’’ என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
அது குறித்து அவர் மேலும், ’’1932ஆம் ஆண்டில் தந்தை பெரியார், மறைமலை அடிகளார், கி.ஆ.பெ.விஸ்வநாதம் போன்ற தமிழ் அறிஞர்கள் திருச்சியில் கூடி, தமிழ் மொழியின் மேன்மையை, பண்பாட்டு சிறப்பை முன்னெடுத்துச் செல்வதற்காக திருவள்ளுவர் எப்போது பிறந்தார்? திருவள்ளுவரின் தொடக்கம் என்ன? திருவள்ளுவரின் மெய்யியல் என்ன? என்பது குறித்தெல்லாம் ஆழ்ந்த சிந்தனையை அவர்கள் கொண்டு சென்றார்கள். அதன் விளைவுதான் இந்தி மொழி இங்கே திணிக்கப்பட்டபோது, அதற்கு எதிரான ஒரு பெரிய பண்பாட்டு போராட்டம் எழுந்தது. அப்படி ஒரு ஆழ்ந்த சிந்தனை தமிழகத்தில் எங்கும் காணவில்லை.
படிப்பதற்கு சற்று கடுகடுப்பான நூல்தான் கால்டுவெல் நூல். அந்த நூலை அவ்வளவு எளிதாக படித்துவிட முடியாது. அந்த நூல் வந்து ஏறத்தாழ 150 ஆண்டுகளை தாண்டிவிட்டது. கால்டுவெல் சொன்ன பல கருத்துகள் இன்று காலாவதி ஆகிவிட்டன. ஆனாலும், இன்றுவரை மொழியியலாளருக்கு இந்த நூல்தான் மூலநூல். தொல்காப்பியம் இருப்பது போல், நன்னூல் இருப்பது போல் இந்த நூல்தான் மொழியியலுக்கு அடிப்படை.
இதிலிருந்துதான் நாங்கள் புறப்பட வேண்டும். ஆகவே, கால்டுவெல்லை புறந்தள்ளிவிட்டு திராவிடம் என்ற கருத்தியலை, மொழியியலை முன்னெடுத்துச் செல்ல முடியாது. மொழியியல் கூறுகள் அடிப்படையில் மீண்டும் கால்டுவெல்லை மொழியியல் கூறுகள் அடிப்படையில், மொழியியல் ஆய்வுகள் அடிப்படையில் ஆங்கிலம் உள்பட அத்தனை மொழித்துறைகளிலும் கால்டுவெல் மீள்பதிவு செய்யப்பட வேண்டும். மீள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இளைஞர்களிடையே கால்டுவெல்லை எடுத்துச்செல்ல வேண்டும். ஆனால், சொல்லித்தரவேண்டிய இடத்தில் ஒருப்பவர்கள் ஒளிந்துகொள்கிறார்கள். காரணம், அவர்கள் கால்டுவெல்லை படிக்கவில்லை. பண்பாட்டு தளத்தில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் இல்லை என்ற கருத்தாக்கத்தை கொண்டு வந்தார் கால்டுவெல். இந்த கருத்தியலில் பிறந்ததுதான் திராவிட இயக்கம். அதன் பின்னர்தான் இரட்டைமலை சீனிவாசன், தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிட கட்சி எல்லாம் வந்து செய்த பண்பாட்டு தாக்கத்தில் நமக்கு முதலில் கிடைத்தது சமூக நீதி. இரண்டாவது மனித உரிமைகள். மூன்றாவதாக கிடைத்தது பெண் கல்வி . திராவிட மாடலுக்கு விதை போட்டவர் கால்டுவெல். ஆனால், திராவிட கட்சியினர் பலருக்கும் கால்டுவெல் பற்றி தெரியவில்லை. கால்டுவெல்லை பற்றி அக்குவேறு ஆணிவேராக அறிந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். கால்டுவெல்லை பற்றி அவர் 2 மணி நேரம் பேசுவார்.
அரசியல் தளத்தில், மெய்யியல் தளத்தில், இலக்கண, இலக்கிய தளத்தில் கால்டுவெல் பரவலாக்கப்பட வேண்டும். கால்டுவெல் நூல்கள் மீள் வாசிப்புக்கு வர வேண்டும். அதற்கு முக்கியமாக கால்டுவெல் நூல்கள் அனைத்தும் தமிழில் வரவேண்டும். கால்டுவெல் எழுதிய நூல்களில் இரண்டு நூல்களை எல்லோரும் அவசியம் படிக்க வேண்டும். 1. திருநெல்வேல் வரலாறு, 2. கால்டுவெல் தன்வரலாறு.
கால்டுவெல் மீள் ஆய்வுக்கு , மீள் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான் கால்டுவெல்லை புதுப்பித்து மேலே கொண்டு வர முடியும்’’ என்று பதிவு செய்கிறார்.