ரோஹித் வெமுலாவின் மரணத்தில் போலீசாரின் அறிக்கை கண்டு கதறும் ராதிகா வெமுலாவுக்கு நீதி பெற்றுத்தரும் விதமாக, ‘’ரோஹித் வெமுலா சட்டம்’’ இயற்றுவோம் என்று ஆறுதல் தெரிவித்திருக்கிறது காங்கிரஸ்.
கடந்த 2016ம் ஆண்டில் தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா பல்கலைக் கழகத்தின் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அம்பேத்கர் மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வந்ததால் ரோஹித் வெமுலாவின் கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்திய நிலையில், இந்த தற்கொலை நிகழ்ந்ததால் நாடெங்கிலும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பாஜக தலைவர்களின் துன்புறுத்தலினால்தான் இந்த தற்கொலை நிகழ்ந்ததாக போலீசில் புகார்கள் குவிந்தன.
இந்த புகார்களை விசாரித்த தெலுங்கானா போலீசார் இறுதி அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில், ரோஹித் வெமுலா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதும், அவரின் உண்மை சமூகம் வெளியில் தெரிந்துவிடும் என்று அவர் அஞ்சிக்கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தில் சரியாக படிக்காததால் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையினை ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா நிராகரித்துள்ளார். அவர், தன் மகன் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் தான் என்றும், படிக்காததால் தற்கொலை செய்துகொண்டதாக சொல்வது முற்றிலும் பொய் என்றும் சொல்லி கதறியிருக்கிறார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து, இந்த விவகாரத்தில் நீதி பெற்றுத்தர வேண்டும் என்று கண்ணீர் வடித்திருக்கிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ‘’பாஜகவின் தலித் விரோத மனப்பான்மையை அம்பலப்படுத்தி இருக்கிறது ரோஹித் வெமுலாவின் மரணத்தின் போலீசார் அறிக்கை. இந்த அறிக்கை கடந்த ஜூன் 23ல் முந்தைய பி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியில் தயாரிக்கப்பட்டது. முந்தைய போலீசாரின் விசாரணையில் பல முரண்பாடுகள் உள்ளன. அதற்காக தெலுங்கானா காங்கிரஸ் ரோஹித் வெமுலாவின் குடும்பத்திற்கு நீதியை பெற்றுத்தரும். ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், சமூக – பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் இதுபோன்ற அவலத்தினை சந்திக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு, கல்லூரிகளில் நடக்கும் சாதி, வகுப்புவாத அட்டூழியங்கள் குறித்து ’ரோஹித் வெமுலா சட்டம்’ இயற்றுவோம்’’ என்று உறுதி கூறியிருக்கிறார்.
கே.சி.வேணுகோபாலில் அளித்துள்ள இந்த உறுதி, ராதிகா வெமுலாவின் கண்ணீரைத்துடைக்கும், காயத்தை ஆற்றும் என்றே அவரது தரப்பினர் நம்புகின்றனர்.