ஐதராபாத்திற்கு வருகை தரும் கால்பந்து வீரர் மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100 பேர் மட்டுமே புகைப்படம் எடுக்க முடியும் என்று வெளியாகியுள்ள தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி :
லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) ஒரு அர்ஜென்டினா நாட்டு தொழில்முறை கால்பந்து வீரர் ஆவார். உலக அளவில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர், தற்போது இன்டர் மியாமி அணி மற்றும் அர்ஜென்டினா தேசிய அணிக்கு முன்கள வீரராகவும் தலைவராகவும் உள்ளார். மேலும், 2022 FIFA உலகக் கோப்பையை அர்ஜென்டினா வெல்வதில் முக்கியப் பங்காற்றினார்.

ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மெஸ்ஸி :
இவர் கால்பந்து உலகில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். மேலும், சமீபத்தில் பல மதிப்புமிக்க விருதுகளையும்,அதிக கால்பந்து பட்டங்களை வென்ற வீரர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில், இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்தியா வரும் லியோனல் மெஸ்ஸி :
இந்த ஆண்டின் மிகவும் உயர்மட்ட விளையாட்டு நிகழ்விற்காக லியோனல் மெஸ்ஸி சனிக்கிழமை அன்று ஹைதராபாத்திற்கு (Hyderabad) வருகிறார். ரசிகர்களுக்கு இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பாக இருந்தாலும், அதற்கு ஒரு பெரும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது,’தி GOAT இந்தியா டூர்’ அமைப்பாளர்கள், அர்ஜென்டின நட்சத்திரத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரூ. 9.95 லட்சம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இதற்கு 100 பிரத்யேக இடங்கள் மட்டுமே உள்ளன என்றும் அறிவித்துள்ளனர். மேலும், இந்த பிரீமியம் சந்திப்பு மற்றும் வாழ்த்து நிகழ்ச்சி புகழ்பெற்ற ஃபலகனுமா அரண்மனையில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மெஸ்ஸி மாலை 4 மணிக்கு ஹைதராபாத்தில் தரையிறங்கி, பின்னர் உப்பல் ஸ்டேடியத்திற்குச் சென்று, மாலை 7 மணிக்குத் தொடங்கும் மூன்று மணி நேர பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அவருடன் உலகக் கோப்பையை வென்ற அணியின் சக வீரர் ரோட்ரிகோ டி பால் மற்றும் லூயிஸ் சுவாரஸ் ஆகியோரும் கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் அதிர்ச்சி :
பல்வேறு நாடுகள் மட்டுமின்றி இந்தியாவிலும் கால்பந்து வீரர் (football player) லியோனல் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில், அவர் ஐதராபாத்திற்கு வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும், சந்திப்பு கட்டணம் ரூ.10 லட்சம் என்பதால் அதிர்ச்சி மற்றும் கவலை அடைந்துள்ளனர்.
